பிரசவித்த இளம்பெண் திடீர் சாவு நாமக்கல் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

நாமக்கல், ஜன.12:  நாமக்கல் அரசு மருத்துவமனையில், பிரசவித்த இளம்பெண் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் அருகேயுள்ள தூசூர் சம்பாமேட்டை சேர்ந்தவர் ஜனகர்(39). இவரது மனைவி ரேவதி (33), தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், ரேவதி 2வது முறையாக கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேவதியை, கடந்த இரு தினங்களுக்கு முன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறவினர்கள் சேர்த்தனர். அங்குள்ள டாக்டர்கள், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு  அவரை அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு, ரேவதிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், திடீரென ரேவதிக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள், நேற்று அதிகாலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அப்போது, டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சையின் காரணமாகவே, ரேவதி இறந்ததாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன் பேரில், ஜனகர் அளித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Relatives ,Namakkal Government Hospital ,
× RELATED இழப்பீடுக்காக கார்களை ஜப்தி செய்ய...