×

அனைவருக்கும் துணைத்தலைவராக ஆசை களியனூர் அக்ரஹாரத்தில் தேர்தல் தள்ளிவைப்பு

பள்ளிபாளையம், ஜன.12: களியனூர் அக்ரஹாரம் ஊராட்சியில், அனைவரும் துணைத்தலைவராக ஆசைப்பட்டனர். அதிர்ச்சியடைந்த தேர்தல் நடத்தும் அதிகாரி, தலைவர் ஆகியோர் 4மணி நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைத்தார்.பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், களியனூர் அக்ரஹாரம் ஊராட்சி 6  உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதன் தலைவர் தேர்தலில் அம்மாசை என்பவர் வெற்றி  பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று, துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 6 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தேர்தல் அலுவலரிடம், 6 பேரும் துணைத்தலைவர்  தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தனர். இதனால் தேர்தல் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு வேட்பாளருக்கு முன்மொழியவும்,  வழிமொழியவும் இரு உறுப்பினர்கள் தேவை. ஆனால் 6 உறுப்பினரும் துணைத்தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டதால், வழிமொழியவும், முன்மொழியவும் யாரும்  முன்வரவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியும்,  ஊராட்சி மன்ற தலைவரும் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் பேச்சுவர்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இறுதியில் வேறு வழியின்றி தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்த அதிகாரி, உத்தரவு நகலை அறிவிப்பு பலகையில் ஒட்டினார்

Tags : Election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...