×

விறு விறுப்பான தலைவர், துணை தலைவர் தேர்தல்

போச்சம்பள்ளி, ஜன.12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் நடந்த தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று உள்ளாட்சித் தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இதையடுத்து, நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தலிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அண்டை மாவட்டங்களான சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழுவில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழுவை திமுக கைப்பற்றியது. இதேபோல், ஊத்தங்கரையை தவிர்த்து 9 ஒன்றியக்குழுவில் மொத்தம் 5 இடங்களை திமுக வசமாக்கிக் கொண்டது.

மத்தூர் ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த விஜயலட்சுமி பெருமாள் போட்டியின்றி வெற்றி பெற்றார். துணை தலைவராக திமுக பர்வீன்தாஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் ஒன்றிய செயலாளர் பொன்.குணசேகரனை சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றனர். தொடர்ந்து அவரது தலைமையில் முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன், ஊராட்சி செயலாளர் கமலநாதன், குணா.வசந்த் ஆகியோர் முன்னிலையில் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் செந்தில், தனசேகரன், சாந்தமூர்த்தி, டைகர் பாலு, முர்த்தி, குமார், குமரேவேல், கிருஷ்ணமூர்த்தி, சிலம்பு, முபாரக், தொகுதி அமைப்பாளர் ராஜசேகர் மற்றும் கவுன்சிலர்கள் ஊர்வலமாக சென்று தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி ஒன்றியக்குழுவில் நடந்த மறைமுக தேர்தலில் ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக பதிவானதால் திமுக-அதிமுக வேட்பாளர்கள் தலா 7 ஓட்டுகளை பெற்றனர். இதையடுத்து, குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் சரோஜினி வெற்றிபெற்றார். முன்னதாக அதிமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மொத்தம் 8 பேராக வந்திறங்கினர். திமுகவினர் 7 பேரும் வந்தனர். அதிமுக தோல்விக்கு ஒன்றியச் செயலாளர் முனியப்பன்தான் காரணம் என கூறி அவரது காரை அடித்து நொறுக்கியதுடன் டிரைவரை கட்சியினர் தாக்கினர். உடனே, அங்கிருந்த போலீசார் அவரை மீட்டனர். 13வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை உறுப்பினரான சங்கீதா தனது மகள் தட்சிணாஸ்ரீ மற்றும் மூன்று மாத பெண் குழந்தையுடன் வாக்களிப்பதற்காக வந்தார். அவர், வாக்களித்துவிட்டு வரும் வரை கணவர் குமரேசன் குழந்தைகளை கவனித்துக் கொண்டார்.

ஓசூர்: ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் பதவி எஸ்.சி. பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மறைமுக தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிமுக சார்பில் போட்டியிட்ட சசி வெங்கடசாமி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர், 7வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். துணை தலைவராக அதிமுக சார்பில் நாராயணசாமி வெற்றிபெற்றார்.
சூளகிரி: சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 5வது வார்டு உறுப்பினரும், சூளகிரி ஒன்றிய அதிமுக செயலாளர மது(எ)ஹேமநாத் மனைவியுமான லாவண்யா போட்டியின்றி வெற்றிபெற்றார். ஏற்கனவே ஒன்றியக்குழு தலைவராக மது பதவி வகித்துள்ளார். அதேபோல், அவரது தந்தை மற்றும் தாயார் சுசீலம்மாள் ஆகியோர் ஒன்றியக்குழு தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது, லாவண்யா பொறுப்பேற்றதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அந்த பதவிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. துணை தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மாதேஸ்வரன் வெற்றிபெற்றார்.

தேன்கனிக்கோட்டை: தளி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், 17வது வார்டு கவுன்சிலருமான சீனிவாசலுரெட்டி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். துணை தலைவராக 9வது வார்டு திமுக கவுன்சிலர் யசோதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 5வது முறையாக தளி ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.
கெலமங்கலம் ஒன்றியக்கழு தலைவர் பதவிக்கு சிபிஐ கட்சியைச் சேர்ந்த 11வார்டு கவுன்சிலர் கேசவமூர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், சீனிவாசன் துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர்களுக்கு சிபிஐ மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Vice President ,Vice President Election ,
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...