×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

கிருஷ்ணகிரி, ஜன.12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 5 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், ஊராட்சிக்குழு துணை தலைவர் மற்றும் 10 ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், 333 கிராம ஊராட்சிக்குழு துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று (11ம் தேதி) நடந்தது. ஊத்தங்கரையை தவிர்த்து 9 ஒன்றியங்களில் நடந்த தலைவர் பதவிக்கான தேர்தலில், திமுக கூட்டணி 5 இடங்களையும், அதிமுக 4 இடங்களை கைப்பற்றியது.
அதுபற்றிய விவரம் வருமாறு:கிருஷ்ணகிரி ஒன்றியம்(20 வார்டுகள்): அதிமுகவைச் சேர்ந்த 17வது வார்டு உறுப்பினர் அம்சா 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை தலைவருக்கு போட்டியிட்ட திமுக கவிதா மற்றும் தேமுதிக வேடியப்பன் ஆகியோர் தலா 10 வாக்குகள் பெற்றனர். குலுக்கல் முறையில் கவிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

காவேரிப்பட்டணம் ஒன்றியம்(27 வார்டுகள்): அதிமுகவைச் சேர்ந்த 14வது வார்டு உறுப்பினர் ரவி 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை தலைவராக திமுக சசிகலா வெற்றி பெற்றார். சூளகிரி ஒன்றியம்(25 வார்டுகள்): அதிமுகவைச் சேர்ந்த 5வது வார்டு உறுப்பினர் லாவண்யா 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை தலைவராக அதிமுக மாதேஸ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஓசூர் ஒன்றியம்(16 வார்டுகள்): அதிமுகவைச் சேர்ந்த 7வது வார்டு உறுப்பினர் சசி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை தலைவராக அதிமுக நாராயணசாமி வெற்றி பெற்றார்.

வேப்பனஹள்ளி(15 வார்டுகள்): அதிமுக ருக்குமணி மற்றும் திமுக சரோஜினி ஆகியோர் தலா 7 வாக்குகள் பெற்றனர். ஒரு வாக்கு செல்லாத வாக்காக பதிவாகி இருந்ததால், குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் சரோஜினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். துணைத் தலைவராக ருக்குமணி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பர்கூர் ஒன்றியம்(30 வார்டுகள்): திமுகவைச் சேர்ந்த 6வது வார்டு உறுப்பினர் கவிதா கோவிந்தராஜ் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவராக திமுக மணிமேகலை வெற்றி பெற்றார்.மத்தூர் ஒன்றியம்(17 வார்டுகள்): திமுவைச் சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த 7வது வார்டு உறுப்பினர் பர்வீன்தாஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தளி(30 வார்டுகள்): திமுகவைச் சேர்ந்த 17வது வார்டு உறுப்பினர் சீனிவாசலு ரெட்டி 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை தலைவராக திமுக யசோதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கெலமங்கலம்(19 வார்டுகள்): சிபிஐ கட்சியைச் சேர்ந்த 11வது வார்டு உறுப்பினர் கேசவமூர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக சிபிஐ கட்சியை சேர்ந்த 1வது வார்டு உறுப்பினர் சீனிவாசா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஊத்தங்கரை ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,union committee chairmanship ,Krishnagiri district ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...