×

பொங்கல் பண்டிகையொட்டி பள்ளிகொண்டா டோல்கேட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ₹1.71 லட்சம் அபராதம்

வேலூர், ஜன.12: பொங்கல் பண்டிகையொட்டி பள்ளிகொண்டா டோல்கேட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ₹1.71 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஓ தெரிவித்தார். பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் வழக்கமாக இயக்கப்படும் விட கூடுதலாக 30 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதே சமயத்தில் தனியார் பஸ்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதனை பயன்படுத்திக்கொண்டு தனியார் பஸ்களில் பயணிகளிடம் அதிக கட்டண வசூலிப்பில் ஈடுபடுவார்கள். இதனை கண்காணிக்க தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஆர்டிஓ ராமகிருஷ்ணன் தலைமையில், வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சிவராாஜ் ஆகியோர் நேற்று பள்ளிகொண்டா டோல்கேட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அதிக கட்டணம் வசூலிப்பது, ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பஸ்கள் இயக்குவது, பர்மிட், அதிக ஆட்கள் ஏற்றிச்செல்வது, வரி செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டது. இதுகுறித்து வேலூர் வட்டர போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் பள்ளிகொண்டா டோல்கேட்டில் நேற்று அதிகாலை நடந்த சோதனையில் அவ்வழியாக வந்த 20 ஆம்னி பஸ்கள், 6 வேன், 2 சரக்கு வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, இணக்கம் கட்டணம், வரி செலுத்தாமல் சென்றது, கட்டணம் நிர்ணயம் என ₹1 லட்சத்து 71 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது. பிற மாவட்ட ஆர்டிஓக்களுக்கு ₹31 ஆயிரம் அபராதம் வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகன சோதனை பொங்கல் பண்டிகை முடியும் வரை தொடரும்’ என்றார்.

Tags : Omni ,bus owners ,
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி