×

முன்னேற்பாடுகள் மும்முரம் வாழை தண்டின் சாறை குடித்தால் சிறுநீரக கல் உண்டாவதை தடுக்கலாம்

நீடாமங்கலம், டிச.10: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வாழை பழத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரித்தல் பயிற்சி புள்ளவராயன் குடிகாடு கிராமத்தில் நடந்தது. நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் கலந்து கொண்டு தலைமையேற்று சுயதொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவர் பேசியதாவது: வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் வைட்டமின்கள் ஏ,பி6,சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள முடியும். வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையில் பயன்படுகிறது. மேலும் அதன் ஒவ்வொன்றிலும் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. வாழை பூவை சமையலில் சேர்த்து கொண்டால் மாதவிடாய் பிரச்னை நீங்கும், வாழை தண்டின் சாறை குடித்தால் சிறுநீரக கல் உண்டாவதை தடுக்கும். வாழை இலையில் சாப்பிட்டால் மனம் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று வாழையின் குணநலன்கள் பற்றி கூறினார்.

உணவியல்துறை பயிற்சி உதவியாளர் வனிதா பேசுகையில், வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகை நீங்கி, இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வாழைப்பழத்தில் அதிக அளவு குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் காணப்படுவதால் உடலுக்கு அதிகபடியான ஆற்றலை கொடுக்கும். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராகி இயங்கி மலச்சிக்கல் பிரச்னையை எளிதில் நீக்கிவிடும். வாழைப்பழத்தில் அடங்கியுள்ள ட்பிரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலங்கள் மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தைப்போக்கி மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்றார். வாழைப்பழத்திலிருந்து பழப்பிசின் (ஜாம்) சிப்ஸ்,வாழை தண்டிலிருந்து ஜீஸ், மிட்டாய், வாழை பூவிலிருந்து வடை மற்றும் தோலிலிருந்து ஊறுகாய் தயாரித்து காண்பிக்கப்பட்டது.தொழில் நுட்ப உதவியாளர் ரேகா, பண்ணை மேலாளர் நக்கீரன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பள்ளங்கோயில் கிராமத்தை...