×

ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் அதிமுகவினர் வழங்க உள்ளாட்சி பிரதிநிதிகள் எதிர்ப்பு

தேனி, ஜன. 10: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச பொங்கல் பரிசுப்பொருள்களை அதிமுக நிர்வாகிகள் மூலம் விநியோகிப்பதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்புத்துண்டு, முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் மற்றும் பரிசுத்தொகை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசு நேற்று முதல் அனைத்து நியாய விலைக்கடைகளின் மூலமாக குடும்ப அட்டையுள்ளவர்களில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், ஏஏஒய் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் அட்டைதாரர்கள், ஓஏபி பயனாளிகள், அன்னபூரணா பயனாளிகள் என மொத்தம் 3 லட்சத்து 98 ஆயிரத்து 637 குடும்ப அட்டைதாரர்களுக்கு 526 நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. நேற்று காலை முதல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் கிஸ்மிஸ், 5 கிராம் ஏலக்காய் அடங்கிய துணிப்பையுடன்கூடிய சிறப்பு பொங்க் பரிசு வழங்கப்பட்டது. இதனை அந்தந்த பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் முன்னிலையில் வைத்து நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் விநியோகம் செய்தனர். தமிழகஅரசின் பொதுமக்கள் வரி வருவாயில் இருந்து வழங்கப்படும் இந்த பரிசுப்பொருள்களை அதிமுக கட்சியே வழங்குவது போன்ற மாயத்தோற்றத்தை ஆளுங்கட்சியினர் ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டியில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றிபெற்ற கவுன்சிலர் விக்னேஷ்வரன் கூறியதாவது: போடி ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். இதேபோல மஞ்சிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவராக திமுக ஆதரவோடு வீரலட்சுமி வெற்றி பெற்றார். தற்போது அரசு பொங்கல் பண்டிகைக்காக நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் பரிசினை வழங்கி வருகிறது. இதனை மக்கள் பிரதிநிதிகளாக உள்ள எங்களை அழைக்காமல் அதிமுக கட்சி நிதியில் இருந்து பொங்கல் பரிசு வழங்குவதைபோன்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

Tags : Representatives ,
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்