×

காரைக்குடி மண்டலத்தில் பரிதாப அரசு பஸ்களால் பாடாய்படும் ஓட்டுனர்கள் பாராமுகமாய் அதிகாரிகள்

காரைக்குடி, ஜன. 10:  காரைக்குடி மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் ஓட்டை உடைசலாக வலம் வருகிறது. இதனால் பஸ்சை இயக்க ஓட்டுனர்கள் பாடாய்படும் அவலநிலை தொடர்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காரைக்குடி மண்டலம் சிவகங்கை, ராமநாதபுரம் என இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுகிறது. இரண்டு மாவட்டங்களிலும் 11 கிளைகள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இம்மண்டலத்துக்கு உட்பட்டு 224 டவுன் பஸ்களும், 473 புறநகர் பஸ்கள் மற்றும் 47 உபரி பஸ்கள் என 744க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் டவுன் பஸ்கள் 577 வழித்தடங்களிலும், 473 புறநகர் பஸ்கள் 282 வழித்தடங்களிலும் இயக்கப்படுகிறது. தினமும் 3 லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 5 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேல் பயணிகள் பயணம் செய்கின்றனர். பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் இந்த பஸ்கள் போதிய அளவில் பராமரிப்பது இல்லை. நீண்ட தூரம் சென்று வரும் பஸ்களை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான பொருட்களை மாற்ற வேண்டும்.

ஆனால் இதுபோன்று நடவடிக்கை எதுவும் நடைபெறுவதில்லை. இதனால் அனைத்து பஸ்களும் ஓட்டை, உடைசலுடன் தான் வலம் வருகின்றன. பெரும்பாலான பஸ்கள் ஓட்டுவதற்கு லாயக்கற்ற நிலையில் தான் இயக்கப்பட்டு  வருகின்றன. போதிய பராமரிப்பு இல்லாததால் பஸ்களின் ஜன்னல்கள் பழுதடைந்து ஏற்றி இறக்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஜன்னல்கள் பராமரிப்பு இல்லாததால் தானாக இறங்கி விடும் நிலை உள்ளது.  இதேநிலை தான் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஓட்டுனர்கள் சிலர் கூறுகையில். ``ஆட்கள் பற்றாக்குறை, பொருட்கள் ஸ்டாக் இல்லை என கூறி பஸ்சை பராமரிப்பது கிடையாது. அனைத்து பஸ்களும் பராமரிப்பு இல்லாமல் தான் இயங்கி வருகிறது. எங்களது திறமையால் ஓட்டி வருகிறோம். வேகமாக போனால் டீசல் அதிகமாக செவாகிவிடும் என்பதற்காக 45 கிலோ மீட்டருக்கு மேல் செல்லக்கூடாது என பம்ப் லாக் செய்து விடுகின்றனர்.

இதனால் ஆக்ஸிலேட்டரை அழுத்த முடியாது. பெடல் டைட்டாகி விடும். நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் நான்கு வழிச்சாலையில் செல்லும் போது ஆக்ஸிலேட்டரை அழுத்திக்கொண்டு இருக்க வேண்டும். இதனால் கால்வலி, மூட்டு வலி வந்து விடும். இதனை தவிர்க்க கல்வைத்து இயக்கப்படுகிறது. மற்ற மண்டலங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அளவில் பம்ப் லாக் செய்கின்றனர். காரைக்குடி மண்டலத்தில் மட்டும் தான் 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது போல் செய்து உள்ளனர். இதனால் பயணிகளுக்கும், எங்களுக்கும் தினமும் பிரச்னை ஏற்படுகிறது. வாகனத்தை தினமும் பராமரிப்பது என்பதே கிடையாது’’ என்றனர்.

Tags : Drivers ,Karaikudi Zone ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...