×

கீழக்கரை காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் வேலைப்பளு அதிகரிப்பு மன உளைச்சலில் அவதி

கீழக்கரை, ஜன. 10: காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் காவலர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். கீழக்கரை நகரின் குடியிருப்புகளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. கீழக்கரை காவல் நிலையத்தில் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 எஸ்.எஸ்.ஐகள், குறைந்த அளவில் காவலர்கள் என மிக மிக குறைவான போலீசாரே உள்ளனர். மேலும் இங்குள்ள இன்ஸ்பெக்டருக்கு கீழக்கரை காவல்நிலையம் மட்டுமின்றி கூடுதலாக ஒரு காவல்நிலையமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சராசரியாக 663 பேருக்கு ஒரு போலீசார் உள்ளனர். அந்த அடிப்படையில் குறைந்தளவில் கீழக்கரையில் 75 பேர் காவல்துறையில் பணியாற்ற வேண்டும். ஆனால் 1980களில் இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே இன்றும் காவல்துறையினர் அதிகப்படுத்தப்படாமல் பணியாற்றுகின்றனர்.

மேலும் பணி ஓய்வு மற்றும் இடம் மாறுதலில் சென்றவர்களுக்கு பதிலாக, இதுவரை போலீசார் நியமிக்கப்படவில்லை. சுற்றிலும் ஏராளமான கிராமங்களை கொண்ட கீழக்கரை பகுதியில், போலீசார் பற்றாக்குறை தொடர்ந்தால் சமூக விரோதிகளுக்கு சாதகமாக போய் விடும் வாய்ப்புள்ளது.
இங்குள்ள போலீசார் தொடர்ச்சியாக ஒய்வில்லாமல் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளகின்றனர். நாளடைவில் இவர்கள் மனரீதியான பிரச்னைகளுக்கு ஆட்படும் வாய்ப்புள்ளது. ஓய்வே இல்லாமல் பணி புரிவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி, மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு தீர்வாக கூடுதலான காவலர்களை நியமிக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : police station ,Kekkarai ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்