×

மேலூர் தொகுதியில் பொங்கல் பரிசு வழங்காததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் எம்எல்ஏ இல்லாததால் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

மேலூர், ஜன.10: மேலூர் நகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பொங்கல் பரிசு வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலூர் நகரில் உள்ள 27 வார்டுகள், 36 ஊராட்சிகள மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூராட்சி என நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு பொங்கல் பரிசு பொருட்களை நேற்று முதல் வழங்குவதாக அறிவித்தது. இதனால் நேற்று காலையில் ஆர்வத்துடன் மேலூர் நகர் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பொங்கல் பரிசுகள் யாருக்கும் வழங்க வில்லை. இன்று அல்லது நாளை வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கவே பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, நான்கு நாட்களுக்கு முன்பே பயனாளிகளுக்கு தேவையான பணம் வந்து விட்டது. அத்துடன் வழங்க வேண்டிய பொங்கல் பொருட்கள் பைகளில் கரும்புடன் தயாராகவே உள்ளது.

ஆனால் தொகுதியில் எம்எல்ஏ ஏதாவது ஒரு ரேஷன் கடையில் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தால் மட்டுமே மற்ற கடைகளில் வழங்கலாம் என கூறிவிட்டார்கள். எம்எல்ஏ சென்னையில் உள்ளதால் அவர் வந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிறகே மேலூர் தாலுகா முழுவதும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தனர். வாடிப்பட்டி தாலுகா முழுவதும் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு எங்குமே வழங்கப்படவில்லை. இதனால் நீண்டநேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். நேற்று வழங்கப்படாததற்கு முறையான காரணங்களும் தெரிவிக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். யாரை எதிர்பார்த்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவில்லை என ஒரு சில ரேஷன் கடைகளில் கடை ஊழியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

Tags : constituency ,Pongal ,Mallur ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...