×

நாளை மறைமுக தேர்தல் ஆத்தூரில் யார் ஒன்றிய தலைவர்? கட்சியினர், மக்கள் எதிர்பார்ப்பு

பட்டிவீரன்பட்டி, ஜன. 10: நாளை மறைமுக தேர்தலையொட்டி ஆத்தூரில் அடுத்த ஒன்றிய தலைவர் யார் என கட்சியினர், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜன. 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனே வெற்றி சான்றிதழ் மற்றும் பதவி ஏற்பதற்கான கடிதமும் வழங்கப்பட்டது.
அதன்படி கடந்த ஜன.6ம் தேதி ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில் நாளை ஜன. 11ம் தேதி ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. ஆத்தூர் ஒன்றியத்தில் 17 கவுன்சிலர்களில் 12 திமுக கவுன்சிலர்களும், 3 அதிமுக கவுன்சிலர்களும், 2 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.
இதனால் 12 கவுன்சிலர்கள் உள்ள திமுகவிற்கே தலைவர், துணைத்தலைவர் பதவிகள் கிடைக்க உள்ளன.

தலைவர் பதவி பெண் (பொது) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. யார் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு திமுக கட்சியினரிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது. பலர் இந்த பதவியை குறிவைத்து காத்திருக்கின்றனர். இதில் யார் போட்டியிட உள்ளனர் என்ற விபரம் இன்று கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகின்றது. இதேபோல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாளை 22 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த துணை தலைவர் பதவிக்கு கிராம ஊராட்சிகளில் கடும் போட்டி நிலவி வருகின்றது. யார் தங்களது ஊருக்கு துணை தலைவராக வர உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு கிராம ஊராட்சி பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

Tags : union leader ,election ,Attur ,Parties ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...