×

வீரபாண்டி ஒன்றிய ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வாங்க கால்கடுக்க நின்ற மக்கள்

ஆட்டையாம்பட்டி, ஜன.10: வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணியின் உத்தரவால், வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்காம்ல் அதிகாரிகள் அலைகழித்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
ஆட்டையாம்பட்டியில் உள்ள பாப்பாரப்பட்டி கூட்டுறவு சங்கத்தின் கீழ், பாப்பாரப்பட்டி, கை.புதூர், தானகுட்டிபாளையம், ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், முத்தனம்பாளையம், மருளையாம்பாளையம், அம்மன்கோவில் பாவடி மற்றும் காட்டுப்பாளையம் உள்ளிட்ட 10 கடைகளில் 6,586 ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்குள்ள ரேஷன் கடைகளில் நேற்று பொங்கல் பரிசு வாங்க பொதுமக்கள் அதிகாலை முதலே குவியத்தொடங்கினர். ஆனால், அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனால், பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் பொறுமையிழந்து தாங்களாகவே வீட்டிற்கு திரும்பிச் சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றுள்ளார். சென்னையிலிருந்து தான் திரும்பி வந்தவுடன் பரிசு பொருட்கள் வழங்குவதாக அவர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பரிசு பொருட்களை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள வீரபாண்டி, பைரோஜி, கடத்தூர், அக்ரஹாரம், எஸ்.பாப்பாரப்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் 50க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படவில்லை. பொங்கல் பரிசு பணம் வழங்க ₹59.15 லட்சம் நிதி ஒதுக்கியும், எம்எல்ஏவின் வாய்மொழி உத்தரவால் அதிகாரிகள் பொங்கல் பரிசை விநியோகம் செய்யாமல் இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேட்டூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, மேட்டூரில் உள்ள பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை, அதிமுக எம்பி சந்திரசேகர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேட்டூர் நகரமன்ற முன்னாள் தலைவர் லலிதா சரவணன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி நிர்மலா, மேட்டூர் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் சாதிக் அலி, டாக்டர் சந்திரமோகன், மேட்டூர் தாசில்தார் அசின் பானு, வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். சங்க செயலாளர் அய்யம்பெருமாள் முன்னிலை வகித்தார். இதில் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட 4 ரேஷன் கடைகளில் உள்ள 2702 நபர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. வீரக்கல்புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் எமரால்டு வெங்கடாஜலம், நங்கவள்ளி ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் சீனிவாசன், சாணாரப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நல்லதம்பி, வனவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் விசுவநாதன், குமரவேல், கணேசன், தங்கவேல், மாதம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓமலூர்: ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நேற்று ஓமலூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காலை முதலே கடைகள் முன்பாக வந்து காத்திருந்தனர். ஆனால், பல இடங்களில் கூட்டுறவு சங்க தலைவர்கள் தாமதமாக வந்ததால் கடும் அவதியடைந்தனர். பரிசு தொகுப்பு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்க நடவடிக்கை எடுக்காததால், கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, அதிக குடும்ப அட்டைகள் உள்ள கடைகளில் தினமும் குறிப்பிட்ட எண்ணிகையில் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அனைவரும் பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் பொதுமக்களை சென்றுசேரும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான கடைகளில் அதிகாலை முதலே காத்திருந்த நிலையில், இலவச வேட்டி, சேலை வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Tags : ration shops ,Pongal ,Veerapandi Union ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா