பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் எலச்சிபாளையம் வேளாண் கூட்டுறவு வங்கியை முதியவர்கள் முற்றுகை

திருச்செங்கோடு,  ஜன.10: திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில்,  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால், தொடக்க  வேளாண் கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் பகுதியிலுள்ள  அகரம் ரேஷன் கடையில், முதியோர்கள்  மற்றும் சர்க்கரை கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை,  பொருட்கள் வழங்க முடியாது என கடை ஊழியர் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த  பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எலச்சிபாளையம்  போலீசார், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்த  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு  கொண்டு செல்வதாக கூறினர். இதனால்  சமாதானமடைந்த பொதுமக்கள், முற்றுகையை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து  சென்றனர். தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் தொடக்க வேளாண்  கூட்டுறவு செயலாளர் மாதேஸ்வரனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து மூதாட்டி ஒருவர் கூறுகையில், பொங்கல் பரிசு வழங்குவதாக  தகவல் கிடைத்ததால் அதிகாலை 5 மணி முதல் ரேஷன் கடை முன்பு  வரிசையில் நின்றிருந்தேன். ஆனால், மதியம் 12 மணிக்கு மேல்  எனக்கு பொங்கல் பொருட்கள் வழங்க  முடியாது என ஊழியர் கூறிவிட்டார். கணவர் மற்றும் மகனை இழந்து அனாதையாக உள்ள எனக்கு பொங்கல்  பரிசு தொகை வழங்காதது மிகவும் கஷ்டமாக உள்ளது என கண்ணீருடன் கூறினார்.

Related Stories: