×

அமராவதி சர்க்கரை ஆலையில் 3 மாத ஊதியத்தை வழங்க கோரி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

உடுமலை, ஜன.10: அமராவதி சர்க்கரை ஆலையில் 3 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க கோரி ஆலை வாயில் முன்பாக ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை அடுத்துள்ள மடத்துகுளம் ஒன்றியம் கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை விவசாயிகளிடம் கரும்புகளை பெற்று கரும்பு அரவை பணி நடப்பது வழக்கம். இத் தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் அரவை முடிந்த நிலையில் தற்போது பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஆலை ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியத்தை வழங்கும்படி ஆலை நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்தும் ஊதியம் வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஊதியம் வழங்காத ஆலை நிர்வாகத்தை கண்டித்து நேற்று 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆலையின் நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த மடத்துக்குளம் போலீசார் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஊதியம் வழங்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவது குறித்து ஆலை நிர்வாகம் எந்தவித பதிலும் கூறாததால் தொழிலாளர்கள் தங்களது தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் ஆலை வாயில் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Dharna workers ,Amaravati Sugar Plant ,
× RELATED அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்