×

முன்னாள் போலீஸ் எனக்கூறி டெங்கு ஒழிப்பு பணியாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை

திருப்பூர்,ஜன.10:திருப்பூர் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். திருப்பூர், 33 வது வார்டுக்குட்பட்ட மண்ணரையை அடுத்துள்ள கஸ்பா மண்ணரை பகுதியில் சிறுமி ஒருவருக்கு சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் நேற்று அந்த பகுதியில் டெங்கு ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள நாகராஜ் என்பவரின் வீட்டில் சோதனையிட்டதில் அவரின் வீட்டில் டெங்கு கொசுவை உருவாக்கும் லார்வா கொசுப்புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவர் முன்னாள் போலீஸ் எனக்கூறி மாநகராட்சி சுகாதார பணியாளர்களை தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தியாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஊழியர்கள் தங்களது அதிகாரிக்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் அபராதம் விதிக்க உத்தரவிட்டதாக தெரிகிறது. மேலும் அந்த ஊழியர்கள் கொசுப்புழு இருந்த வீட்டிற்கு அபராத நோட்டீஸ் ஒட்டியபோது அதனை கிழித்து எரிந்து மீண்டும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்களை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் நேற்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : dengue mosquitoes ,policemen ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்