×

கோவையில் உணவுத்துறை அதிகாரிகள் ரெய்டு 220 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

கோவை, ஜன. 10: கோவையில் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 220 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீசாரும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இணைந்து நேற்று டவுன்ஹால் பகுதியில் உள்ள ராஜவீதி, இடையர் வீதி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சங்கர் பேன்சி ஸ்டோரில் பேராராம்(28), நாகராம்(30) ஆகியோர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சகோதரர்களான பேராராம், நாகராம் ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த 117 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இதேபோல் இடையர் வீதியில் ரமேஷ், ஹரிஷ் தேவசி ஆகியோருக்கு சொந்தமான குடோனை சோதனை செய்த போது புகையிலைப்பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் குடோனில் பதுக்கி வைத்து இருந்த 103 கிலோ புகையிலை பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட இரண்டு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தம் 220 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு தற்போதுள்ள சந்தையில் ரூ.7 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின் போது, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர் பாலசுப்ரமணி, காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். கட்டிட உரிமையாளர்கள் வியாபார நோக்கில் அதிக லாபத்திற்காக புகையிலை பொருட்கள் விற்கும் நபர்களுக்கு கடையை வாடகைக்கு விடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வழக்கு முடியும் வரை கட்டிடத்தை வாடகைக்கு விடவோ, பயன்படுத்தவோ முடியாது என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Railway officials ,
× RELATED ரூ.60 கோடி லஞ்சம் : ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு