×

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அத்துமீறும் வாகனங்களுக்கு பூட்டு போட முடிவு

கோவை, ஜன. 10:  கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பூட்டு போட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும்  10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால், மருத்துவமனை வளாகம் பகல் நேரத்தில் பரபரப்பாக காணப்படும். நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் தங்களின் வாகனங்களை மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களில் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிக்க துவங்கியுள்ளது. ரயில் மூலம் வெளியூருக்கு பணிக்கு செல்லும் பலர் பைக்குகளை மருத்துவமனை வளாகத்தில் பார்க்கிங் செய்து விட்டு செல்வதும் தெரியவந்துள்ளது. இது போன்று நிறுத்தப்படும் வாகனங்களின் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் இடநெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில், அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு போட மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, செக்யூரிட்டிகளை தினமும் நிறுத்தப்படும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், வாகன எண்களை நோட்டில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. இது குறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சடகோபன் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பத்து நாட்கள் வாகனங்களை கண்காணிக்க பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுடன் தங்கும் உறவினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது’’ என்றார்.

Tags : government ,premises ,Government Hospital ,Coimbatore ,
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு