×

பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு கடும் போட்டி

பள்ளிப்பட்டு, ஜன. 10 :பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் ஒன்றிய குழுத் தலைவர் பதவிகான தேர்தல் நாளை (11ம் தேதி) பெற உள்ளது. இதில் கடும் போட்டி நிலவி வருவதால், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் வலை வீசி வருகின்றனர்.பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள்  பதவிகளுக்கு நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில்  அதிமுக சார்பில் 6 பேர், அதன் கூட்டணி கட்சியான தேமுதிக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. திமுக சார்பில் திமுக 4, கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றி பெற்றனர். ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்ற 7 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில்,  அதிமுக முழு பலம் வைத்திருப்பதால் ஒன்றிய குழுத் தலைவர் பதவி உறுதி என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய குழு தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண் கவுன்சிலருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற உஷா ஸ்டாலின்  ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட திமுக ஆதரவு கோரினார். அவருக்கு திமுக சார்பில் 4 கவுன்சிலர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஒருவர் ஆதரவு இருப்பதாக கூறப்படுகின்றது. காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர் நிலை உறுதிப்படுத்தாத நிலையில்  திமுக வசம் 6 பேரும், அதிமுக பக்கம் 5 பேர் உள்ளனர். வெற்றிக்கு 7 கவுன்சிலர்கள் தேவைப்படும் நிலையில்  ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதரவு பெற அரசியல் கட்சியினர் வலை வீசி  ஆசை காட்டி வருகின்றனர்.

ஒன்றிய குழுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், கவுன்சிலர்கள் கைவிட்டு செல்லக் கூடாது என்பதற்காக  ரகசிய  பகுதிகளில் முகாமிட்டு பாதுகாப்பாக கண்காணித்து வருகின்றன.ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளில் 8 கவுன்சிலர்கள் திமுக கூட்டணி, 8 கவுன்சிலர்கள் அதிமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். 9 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒன்றிய குழுத் தலைவர் பதவியை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருப்பதால், ஒரு கவுன்சிலர் பதவியை பெற திமுக, அதிமுக தீவிர முயற்சி செய்து வருகின்றன. இதனால் பள்ளிப்பட்டு,ஆர்.கே.பேட்டையில்  பெரும் அரசியல் பரபரப்பு நிலவுகின்றது.


Tags : union chairman ,RK Bette ,Pallipattu ,
× RELATED அத்திமாஞ்சேரிப்பேட்டையில் தொடரும் பைக் திருட்டு: பொதுமக்கள் அச்சம்