×

இசிஆர் எல்லையம்மன் கோயில் பகுதியில் நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

செய்யூர்,  ஜன. 10: செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிறுத்ததிற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து பேருந்துகளை பிடித்து பயணம் செய்து வருகின்றனர். இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக பயணிகள் நிழற்குடை கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன் கிழக்கு கடற்கரை சாலை விரிவுபடுத்தும் பணியின்போது, இந்த பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டது.  அதன்பின் அங்கு புதிய நிழற்குடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. மேலும், சாலை விரிவாக்கத்திற்கு பின்னர் பயணிகள் நிழற்குடை அமைந்திருந்த இடம் சிலரால்  ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கையில்  அதிகாரிகள் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதனால் தற்போது நிழற்குடை இல்லாமல் இங்கு வரும் பயணிகள் கடும் வெயிலிலும், மழையிலும் ஒதுங்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கிழக்கு கடற்கரை சாலையான இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் எங்கும் ஒதுங்க இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். பஸ்சுக்காக காத்திருக்கும் போது சாலையோரம் ஒதுங்கினால் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் நாள்தோறும் சிரமப்பட்டு வருகிறோம். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. இப்பகுதியில் நிழற்குடை அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.


Tags : Bus stop ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...