×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொங்கல் பரிசு வினியோகம் தொடங்கியது

காஞ்சிபுரம், ஜன. 10: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்பு துண்டு மற்றும் ரொக்கம் ₹1000 ஆகியவைகள் பொங்கல் பையிலிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பபடுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தற்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்காக 3,37,990 குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 337.99 மெட்ரிக் டன், சர்க்கரை 337.99 மெட்ரிக் டன், முந்திரி 6.76  மெட்ரிக் டன்னும், திராட்சை 6.76 மெட்ரிக் டன், ஏலக்காய் 1.69 மெட்ரிக் டன்னும், இரண்டடி நீளமுள்ள சுமார் 3.37 லட்சம் கரும்பு துண்டுகளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக ₹1000 வீதம் ₹33.79 கோடி என மொத்தம் ₹38.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று முதல் ஜன.13ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
அதன்படி ஒரு நாளைக்கு சுமார் 300 முதல் 350 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஜன.13ம் தேதி விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்புதூர்:பெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் வெங்காடு, கருணாகரச்சேரி, இரும்பேடு ஆகிய கிராமங்களில் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹1000 பணம் வழங்கும் விழா வெங்காடு ரேஷன் கடைகளில் நடைபெற்றது.இதில் ஸ்ரீபெரும்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன் கலந்துகொண்டு 720 குடும்பங்களுக்கு இலவச பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹1000 பணத்தை வழங்கினார்.இதில் ஊராட்சி செயலாளர் தணிகாசலம் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர் ரேஷன் கடையில் 600 குடும்பத்தினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கினார்.எறையூர் ஊராட்சியில் மாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் எறையூர் முனுசாமி 800 குடும்பத்தினருக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார்.காந்தூர் ரேஷன் கடையில் மதுரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் சிங்கிலிபாடி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.
திருப்போரூர்: திருப்போரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தின் கீழ் உள்ள திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், செங்காடு,  தண்டலம், மேட்டுத்தண்டலம், சாலவான்குப்பம், பட்டிபுலம், வடநெம்மேலி பகுதி கடைகளில் பொங்கல்  சிறப்புத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நேற்று  திருப்போரூரில் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் தலைமை  தாங்கினார்.

கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி.டி.மோகன் பொதுமக்களுக்கு  குடும்ப அட்டை ஒன்றுக்கு 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு  ஆகியவற்றை வழங்கினார். மொத்தம் 9 முழு நேர கூட்டுறவு கடைகள், 2 பகுதி நேர  கூட்டுறவு கடைகளில் உள்ள 7406 குடும்ப அட்டைதாரர்களுக்கு த பொங்கல்  பரிசு வழங்க உள்ளதாக வங்கி தலைவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்  அ.தி.மு.க. திருப்போரூர் ஒன்றிய செயலாளர் குமரவேல், கடன் சங்க இயக்குனர்கள்  கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன்  நன்றி கூறினார்.

அதிமுகவினர் வாக்குவாதம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொங்கல் பரிசு பை நேற்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகமங்கலம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பை வாங்குவதற்காக காலை 7 மணி முதல் பொதுமக்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்தனர். அப்போது கீரப்பாக்கம் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ஏழுமலை, கண்ணன், குணசேகரன், சாமிநாதன் உள்பட ஏராளமானோர் அதிமுக சார்பில் கை பைகளுடன் வந்து ரேஷன்  கடைக்காரரை அழைத்து, ‘‘பொங்கல் பரிசு பை வழங்குவது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்ளுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை? குறைவாக ஏன் பைகளை கொண்டு வந்தீர்கள்? பொதுமக்கள் எப்படி பரிசு பொருட்களை வாங்கி செல்வார்கள்?’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை கண்டதும் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறி ரேஷன் கடைக்காரரை பொருள் வழங்கும்படி கூறினார். இதனால் திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து நல்லம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் லட்சுமணன், துணை தலைவர் கண்ணப்பன், முன்னாள் வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, கூட்டுறவு சங்க இயக்குநர்கள் மற்றும் கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வந்து இருதரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.


Tags : Pongal Gift Distribution ,Kanchipuram ,Chengalpattu Districts ,
× RELATED கட்டவாக்கத்தில் வாக்களிக்க வர...