×

புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் ஓட்டல் உரிமையாளர் கொலையில் அண்ணனின் மைத்துனர் கைது கூலிப்படையை சேர்ந்த இருவருக்கு வலை

புதுக்கோட்டை, ஜன.10: புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் ஓட்டல் நடத்தி வந்த சுரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுரேஷின் அண்ணனின் மைத்துனரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்தையா மகன் சுரேஷ் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ் ஓட்டலை மூடிவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு சென்றபோது மர்மநபர்கள் சுரேஷை சரமாரியாக வெட்டிகொலை செய்துவிட்டு தப்பித்து சென்றுவிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கீரமங்கலம் போலீசார் இறந்த சுரேஷின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராமநாதன் மகன் சரணவன்(40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சரவணன் கூறியதாவது: என்னுடைய தங்கை விஜலெட்சுமியை சுரேஷின் அண்ணன் முருகேசனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். நான் என்னுடைய தங்கை மீது மிகுந்த பாசமாக இருப்பேன். எனது தந்தை இறந்த பிறகு தங்கை விஜலெட்சுமியை நல்ல முறையில் படிக்க வைத்து திருமணம் செய்துகொடுத்து நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுரேஷின் அண்ணன் முருகேசனுக்கு திருமணம் செய்து கொடுத்தேன்.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு என்னுடைய தங்கை விஜயலெட்சுமி மாமியார் ஜானகிதேவியின் கொடுமையால் சுரேஷ் நடத்தி வந்த ஓட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முக்கிய காரணம் எனது தங்கையின் மாமியார் ஜானகிதேவிதான். இதனால் ஜானகிதேவியை பழிவாங்க எண்ணினேன். சுரேசும், அவருடைய அம்மா ஜானகிதேவியும் மிகுந்த பாசமாக இருந்து வந்தனர். இதனால் சுரேஷை கொலை செய்தால் ஜானகிதேவியை பழிவாங்கலாம் என்று நினைத்து நான் பட்டுக்கோட்டையிலிருந்து ராம்கி உள்ளிட்ட கூலிப்படையை சேர்ந்த இரண்டுபேரை வரவழைத்து சுரேஷை கொலை செய்ய ரூ.50 ஆயிரம் பேசினேன். பேசி முடிவு செய்தவுடன் ரூ.10 ஆயிரம் முதலில் அட்வான்சாக கொடுக்கப்பட்டது. காரியத்தை முடித்தபிறகு மீதிப்பணம் ரூ.40,000 தருவேன், கொலை நடந்த பிறகு நீங்கள் இருவரும் சரணடைய வேண்டும். நான் ஜாமீனில் எடுத்துவிடுகிறேன் என்று ராம்கியிடம் சரவணன் கூறியுள்ளார். இதனையடுத்து ராம்கி மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இரண்டு பேரும் இணைந்து சுரேஷை கொலை செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சரவணனை அழைத்து கொண்டு கூலிப்படையை சேர்ந்த ராம்கி உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்ய போலீசார் பட்டுக்கோட்டைக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சுரேசின் உறவினர்கள் சரவணனை கொலை செய்யலாம் என்று தகவல் அந்த பகுதியில் பரவி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Brother ,murder ,hotel owner ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...