×

அரியலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்லும் பொதுமக்கள்

அரியலூர், ஜன. 10: அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. இதை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி பொது விநியோக திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் 440 பொதுவிநியோ திட்ட அங்காடிகளில் இணைக்கப்பட்டுள்ள 2,28,736 குடும்ப அட்டைதாரர்களுக்கு முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, சர்க்கரை மற்றும் பச்சரிசியுடன், தலா ரூ.1000 வீதம் ரூ.22 கோடியே 87 லட்சம் ரொக்கம், தொகுப்பு பை சேர்த்து ரூ.24 கோடியே 13 ஆயிரம் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து குடும்ப அட்டைதாரர்கள் நேற்று முதல் வரும் 12ம் தேதி 4 நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2.00 முதல் மாலை 6.00 மணி வரையிலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.இதையடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள், இயக்குனர்கள் பரிசு தொகுப்பை வழங்கினர். ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் என தனித்தனி வரிசையில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்றனர். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Ariyalur ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...