×

சென்னை, திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் கோட்ட மேலாளரிடம் ரயில் உபயோகிப்பாளர் சங்கம் மனு

நாகை, ஜன.10: நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவினை முன்னிட்டு சென்னை, திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று நாகூர்- நாகப்பட்டிணம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்கம் சார்பில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு கொடுத்தனர்.நாகூர்- நாகப்பட்டிணம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்கம் சார்பில் கவுரவத் தலைவர் ராசமாணிக்கம், தலைவர் மோகன், செயலாளர் சித்திக் ஆகியோர் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார், கோட்ட இயக்க மேலாளர் பூபதிராசா ஆகியோரை திருச்சியில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: அதிகாலை விரைவு ரயில் காரைக்கால் அல்லது வேளாங்கண்ணியில் இருந்து திருச்சிக்கும், மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து இரவு 6.45க்கு பிறகும் இயக்க வேண்டும். தினசரி மதுரைக்கு தஞ்சை, திருச்சி வழியாக விரைவு ரயில் இயக்க வேண்டும். அல்லது மதுரை வழியாக தென் மாவட்டம் சென்று வர ரயில் இயக்க வேண்டும். தினசரி இரவு நேர விரைவு ரயில் யஸ்வந்த்பூர் அல்லது ஹூப்ளிக்கு இயக்க வேண்டும். கோவை-காரைக்கால்- கோவை இடையே பகலில் அதிவேக விரைவு ரயில் பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, நாகை நாகூர் வழியாக இயக்க வேண்டும். காலை 9.30 மணிக்கு காரைக்கால் - தஞ்சை இடையேயும் மதியம் 1.30 மணிக்கு தஞ்சை-காரைக்கால் இடையே பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.

காரைக்கால் -அஜ்மீர் இடையே வாரமிருமுறை விரைவு ரயில் இயக்க வேண்டும். காரைக்கால் தஞ்சை வரையிலான 95 கிலோ மீட்டர் பாதை ஒரு வழியாக இருப்பதாலும் தொடர்ந்து நாகூர் அருகே இறக்குமதி ஆன நிலக்கரி இரவும் பகலும் ரயில் சரக்கு வேகன்களில் சென்று திரும்புவதால் ரயில்கள் அடிக்கடி காலதாமதமாக சென்று வருகிறது. எனவே நாகையில் இருந்து தஞ்சை வரையிலான 78 கிலோ மீட்டர் பாதையை இரட்டை ரயில் பாதையாக்க வேண்டும். இதனால் நிலக்கரி சரக்கு மூலம் வருமானம் அதிகரிக்கவும் ரயில்களை இயக்கவும் மேம்படுத்தவும் முடியும். நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா வரும் 26ம் தேதி தொடங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெறுவதால் நாகூர் ரயில் நிலையத்தில் குடிதண்ணீர், கழிப்பறை போன்றவற்றை ரயில்வே நிர்வாகம் மேம்படுத்த வேண்டும். சென்னை-காரைக்கால் -சென்னை இடையேயும், காரைக்கால் -திருநெல்வேலி -காரைக்கால் இடையேயும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று அதில் தெரிவித்து இருந்தனர்.

Tags : Railway Utility Association ,Fort Manager ,Tirunelveli ,Chennai ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!