×

பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்தபின் சாலையை சரிவர போடாததால் பள்ளத்தில் சிக்கிய டாரஸ் லாரி

மயிலாடுதுறை, ஜன.10: மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்த பின்னர் நகராட்சி நிர்வாகம் சாலையை சரிவர போடாததால் நேற்று அவ்வழியாக சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்த பொதுமக்கள் சாலையை முறையாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை- தரங்கை சாலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் சாலை உள்வாங்கியது, சாலையை தோண்டி பாதாள சாக்கடைக்குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. சுமார் 60 அடி தூரத்திற்கு 20 அடி ஆழம் தோண்டி குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டதால் மீண்டும் சாலை அமைக்கும்போது மழை குறுக்கிட்டதால் சாலை சரிவர அமைக்க முடியவில்லை. இரண்டு மாதகாலமாக முக்கிய சாலையில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் நகரின் தருமபுரம் சாலையில் சென்று அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கும் தரங்கம்பாடிக்கும் சென்று வருகிறது. பாதாள சாக்கடைக்குழாய் சரி செய்யப்பட்டதால் 4 சக்கர வாகனங்கள் பள்ளத்தின் இரண்டு பக்கத்திலும் சென்று வருகின்றன. இதற்கிடையே சாலை அமைக்கப்படவில்லை என்றுகூறி 60 அடிக்கும் நாற்றுநடும் போராட்டம் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் அந்த நாற்றுக்களை பிடுங்கி எறிந்துவிட்டனர். மேலும் அவ்வழியாக கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

இது தெரிந்தும் சாலையில் சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று நேற்று அந்த வழியே சென்றது. பாதிப்பிற்குள்ளான சாலையில் 30 அடி தூரத்திற்குள் லாரியின் இடதுபக்க சக்கரங்கள் அனைத்தும் சாலைக்குள் புதைந்தது. லாரி டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை எடுக்க முடியாமல் மேலும் மேலும் லாரி உள்வாங்கியது. லாரியை மீட்க முடியவில்லை. அதையடுத்து நிறுவனத்திலிருந்து வேறு லாரி ஒன்றை வரவழைத்து அனைத்து சிமென்ட் மூடைகளையும் அதில் ஏற்றியபிறகு சிக்கிக்கொண்ட லாரியை மீட்டனர். உடனடியாக இந்த சாலையை சரிசெய்யாவிட்டால் இதேபோன்று கனரக வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலைமை ஏற்படும் என கண்டனம் தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முறையாக சாலை அமைத்து போக்குவரத்துக்கு திருப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...