×

திருக்கோவிலூர் பகுதியில் தொடர் திருட்டு எதிரொலி

திருக்கோவிலூர், ஜன. 10:    திருக்கோவிலூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.    
 திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் டி.தேவனூரில் உள்ள பெருமாள் கோவில், அந்திலி அங்காளம்மன் கோவில், கீழையூரில் உள்ள பிரசித்த பெற்ற வீரட்டஸ்வரர் கோயில் உள்ளிட்ட மூன்று இடங்களில் கோயில், கதவு உடைக்கப்பட்டு உண்டியலை உடைத்து, நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பீதியில் இருந்தனர். மேலும், ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், கடந்த ஒரே மாதத்தில் செட்டிதாங்கல், திருக்கோவிலூர் மற்றும் வேங்கூர் ஆகிய பகுதிகளில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டதுடன் தங்களை கண்டுபிடிக்காமல் இருக்க கேமராவை மூடியும், கருப்பு ஸ்பிரேவினை கேமரா மீது அடித்ததோடு, ஏடிஎம் அறையில் மிளகாய் பொடி தூவி விட்டு சென்றுள்ளனர்.

 இதற்கு முன்னதாக கடந்த ஆறு மாதங்களில் திருக்கோவிலூர் செவலை ரோட்டில் ஐஏஸ் அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த பீரோவை அருகே வயல் பகுதிக்கு எடுத்து சென்று உடைத்துள்ளனர். தெடர்ந்து முதலூர் பகுதியில் ஒரே நாளில் மூன்று பேரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோல் கீழையூர் தலைமையாசிரியர், செவலை ரோடு வேளாண்மை அலுவலர் வீட்டிலும், கீழத்தேனூரில் உள்ள பெங்களூரில் உள்ள கூலி வேலை செய்பவர் வீட்டிலும், சந்தப்பேட்டை ஏட்டு வீட்டிலும் கடைசியாக நேற்று முன்தினம் அம்மன்கொல்லைமேடு விவசாயி வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை நடந்துள்ளது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், போலீசார் என்ன செய்கிறார்கள், கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்க இதற்காக தனிப்படை அமைத்து மர்மநபர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 இதையடுத்து, திருக்கோவிலூர் பகுதியில் நிலவும் தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்கும் வகையில், எஸ்பி மகேஷ் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : theft ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது