×

திருவனந்தபுரத்தில் தமிழக- கேரள டிஜிபிக்கள் ஆலோசனை

களியக்காவிளை, ஜன.10:  களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் நடத்தப்பட்ட தாக்குதல், சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை தொடர்பாக தமிழக- கேரள டிஜிபிகள் திருவனந்தபுரத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். களியக்காவிளையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து தமிழக டிஜிபி திரிபாதி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து திருவனந்தபுரம் அருகே சங்குமுகம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ராவுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது களியக்காவிளை சோதனை சாவடியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம், அங்கு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது, இதன் பின்னணியில் உள்ளவர்கள், அவர்களது தொடர்புகள், எடுக்க வேண்டிய மேல்நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் களியக்காவிளை சோதனைசாவடியில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் டிஜிபி திரிபாதி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தமிழக தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், கேரளாவை சேர்ந்த டிஐஜி அசோக், நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி ஜெயந்த் முராரி, தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன், நெய்யாற்றின் டிஎஸ்பி அனில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்போது சோதனை சாவடியில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த சுவர், எஸ்.ஐ விழுந்து கிடந்த இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் டிஜிபி திரிபாதி அங்கு சிறிது நேரம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கொலையாளிகள் கொலை செய்த பின் கேரளாவுக்கு தப்பி சென்றாலும் அங்கிருந்து உடனடியாக வேறு பாதை வழியாக தமிழகத்துக்கு உடனே திரும்பி வந்திருக்கலாம். எனவே தமிழக பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். திருவனந்தபுரம் டிஐஜி சஞ்சய்குமார் துருடின் துப்பாக்கி சூடு நடந்த பகுதியை முன்னதாக பார்வையிட்டார்.துப்பாக்கி சூட்டில் தொடர்புடையவர்கள் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்படுவதால், கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தவுபிக் மற்றும் அப்துல் சமீம் ஆகிய 2 பேரின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த படங்களை கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Kerala ,Consultations ,Thiruvananthapuram ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது