×

எஸ்.ஐ. சுட்டுக்கொலைக்கு பின்னணி என்ன?

நாகர்கோவில், ஜன.10: இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் ஆசாமிகளை தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கிடைக்கும் ஆவணங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வாயிலாக இந்தியாவில் அசம்பாவித சம்பவங்கள் நடத்தப்படலாம் என்று தகவலும் வெளியாகி இருந்தது. இதில் சேலத்தை சேர்ந்த ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு, கேரள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் அதன் தொடர்புகள் குமரி மாவட்டத்திற்கும் நீண்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் தீவிரவாதிகள் 4 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல் உளவு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. கன்னியாகுமரி வழியாக இவர்கள் காரில் தமிழகத்திற்குள் வந்ததாக மத்திய உளவுத்துறையும் தெரிவித்தது. இதன் பேரில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. 4 பேரின் புகைப்படத்தை போலீசார் கடந்த மாதம் 19ம் தேதி வெளியிட்டனர். அவர்கள் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம்(25), கோட்டார், இடலாக்குடி, இளங்கடையை சேர்ந்த செய்யது அலி நிவாஸ் (25), பரங்கிபேட்டையை சேர்ந்த அப்துல் சமது, காஜா மொகைதீன் ஆவர். இந்த 4 பேரின் புகைப்படங்களுடன் தமிழகம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்தில்  தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் அவர்களின் வீடுகளில் எஸ்ஐயூ எனப்படும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் டிஎஸ்பி சுப்பையா தலைமையில்  கடந்த 23ம் தேதி அதிகாலை சோதனையிட்டிருந்தனர். நாகர்கோவில், கோட்டார் இளங்கடை மாலிக் தினார் நகரை சேர்ந்த செய்யது அலி நிவாஸ், அவருடன் தொடர்பில் இருந்ததாக தவுபிக், தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள அப்துல் சமீம் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டிருந்தது. ஆனால்  அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவலும் போலீசாரால் கண்டறியப்படவில்லை. போலீசார் தங்களை நெருங்கி வருகின்ற நிலையில் போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. வழக்கமாக இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் தீவிரவாத அமைப்புகள் தாங்கள்தான் இதற்கு பொறுப்பு என்பது போன்று துண்டு பிரசுரங்கள், கையால் எழுதப்பட்ட பிரதிதிகள் போன்றவற்றை சம்பவ இடத்தில் வீசி செல்வது, அதுபோன்ற அடையாளங்களை விட்டுச்செல்வது வழக்கம். ஆனால் களியக்காவிளை துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை அதுபோன்ற அடையாளங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை, எந்த அமைப்பும் பொறுப்பேற்றதற்கான தகவல்களும் வெளியாகவில்லை.

Tags : shooting ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...