×

தினகரன்-சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி இணைந்து வழங்கும்

‘வெற்றி நமதே’ பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான சிறப்பு முகாம்

தோவாளையில் நாளை நடக்கிறது

நாகர்கோவில், ஜன.10: நாகர்கோவில் பதிப்பு தினகரன் மற்றும் தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி இணைந்து நடத்துகின்ற வெற்றி நமதே என்னும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான வழிகாட்டி சிறப்பு முகாம் நாளை (11ம் தேதி) சனிக்கிழமை தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் நாளிதழ் தினகரன், மாணவ மாணவியர் நலனுக்காக பல்வேறு கல்வி பணிகளை ஆற்றி வருகிறது. பிளஸ் 2 படித்து முடிக்கின்ற மாணவ மாணவியர் தங்கள் உயர்கல்வியை எங்கு கற்கலாம், எந்த படிப்பை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பாக தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில் கல்வி கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அத்தோடு பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்கின்ற மாணவ மாணவியர் தேர்வு பயமின்றி எளிதாக எதிர்கொள்ள ‘வெற்றி நமதே’ என்ற சிறப்பு வழிகாட்டி முகாமையும் நடத்தி வருகிறது.இந்த ஆண்டு நாகர்கோவில் பதிப்பு தினகரன் மற்றும் தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்துகின்ற பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான ‘வெற்றி நமதே’ என்ற கல்வி வழிகாட்டி இலவச சிறப்பு முகாம் நிகழ்ச்சி நாளை (11ம் தேதி) சனிக்கிழமை தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடத்துகிறது. குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கலந்துகொண்டு ‘வெற்றி நமதே’ சிறப்பு முகாமை தொடக்கி வைத்து மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்கி பேசுகிறார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயர் ரெவரண்ட் ஏ.ஆர்.செல்லையா தலைமை வகிக்கிறார்.

தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் அட்வகேட் டாக்டர் பி.கிங்ஸ்லி கோல்டுவின் வரவேற்கிறார். கல்லூரியின் நிதி காப்பாளர் டாக்டர் ஆர். ஐசக் ராபி முன்னிலை வகிக்கிறார்.  தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.டினேஷ்குமார் அறிமுகவுரை வழங்குகிறார். மாணவ மாணவிகள் தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது? என்பது தொடர்பாக பாட வாரியாக விளக்கங்களை அளிக்க ஆசிரியர்கள் வருகை தருகின்றனர். நெல்லை மாவட்டம் கடம்பன்குளம் ஏ.டி. பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரும், வேதியியல் ஆசிரியருமான டாக்டர் சுந்தரம், பாலாமடை அரசு மேல்நிலை பள்ளி இயற்பியல் ஆசிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி, நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளி கணித ஆசிரியர் ஷேக், வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலை பள்ளி உயிரியல் ஆசிரியர் முத்துசுவாமி ஆகியோர் பாடவாரியாக மாணவ மாணவியருக்கு அறிவுரைகள் வழங்குகின்றனர். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜாண் கென்னடி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியருக்கு தன்னம்பிக்கை உரை வழங்கி பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐ குமரி பேராய உப தலைவர் டாக்டர் டி.தம்பி விஜயகுமார், செயலாளர் இன்ஜினியர் எஸ்.பைஜூ நிஷித்பால், பொருளாளர் என்.பி.தங்கராஜ் மற்றும் சிஎஸ்ஐ பேராய பள்ளிகள் கூட்டு மேலாளர் ரெவரண்ட் டாக்டர் எம்.முத்துசாமி கிறிஸ்துதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

தினகரன் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை சன் டிவி புகழ் மதுரை முத்து தொகுத்து வழங்க உள்ளார். ‘வெற்றி நமதே’ சிறப்பு முகாமில் பங்கேற்க வருகை தரும் மாணவ மாணவியருக்கு வசதியாக நாகர்கோவில், கருங்கல், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், திங்கள்நகர், குளச்சல், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, வடசேரி, திட்டுவிளை ஆகிய பகுதிகளில் இருந்து காலையில் கல்லூரி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு இந்த பஸ்கள் புறப்படும். முகாமில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியருக்கு மதிய உணவு மற்றும் தேனீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச கிட், அதிர்ஷ்டசாலி மாணவ மாணவியருக்கு மொபைல், டேப்லட், செல்போன் போன்ற பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

Tags : Dinakaran-CSI Engineering College ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி