×

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: சிபிஐ இன்ஸ்பெக்டரிடம் 8 மணி நேரம் விசாரணை: தங்கத்தை லாக்கரில் வைத்த அதிகாரிகள் குறித்து சரமாரி கேள்வி

சென்னை: சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில், சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேலிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினர். அதில், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்தும், யார் முன்னிலையில் லாக்கர் சீல் வைக்கப்பட்டது உள்ளிட்ட சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்த குற்றச்சாட்டை எழுந்தது. அதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்து வழக்கு பதிவும் செய்யப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்திலேயே உள்ள லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது. வங்கிக் கடனை அடைக்க சீல் வைத்த லாக்கரை திறந்தபோது அதில் 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை மாயமாகி இருந்தது. இதுகுறித்து சொத்துக்கள் விற்பனை செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ராமசுப்பிரமணியன் மாயமான தங்கம் குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் மாயமான 103 கிலோ தங்கம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி டிஜிபி பிரதீப் பிலிப் உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் ஐபிசி 380(திருட்டு) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் முன்னாள் மேலான் இயக்குநராக இருந்த விஜய் ராஜ் சுரானாவிடம் விசாரணை நடத்தினர். மேலும், சுரானா நிறுவனத்தில் தங்கம் மாயமான லாக்கரையும் தடய அறிவியல் துறை தலைவர் ஹேமலதா தலைமையிலான 3 அதிகாரிகள் கடந்த 8ம் தேதி ஆய்வு செய்தனர்.இந்நிலையில், சுரானா நிறுவனத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆஜராகி மாயமான தங்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல் என்பவருக்கு நேற்று நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்ற காலை சிபிஐ இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் ஐஜி சங்கர் மற்றும் எஸ்பி விஜயகுமார் ஆகியோர் சோதனையின் போது எவ்வளவு தங்கம் கைப்பற்றபட்டது. தங்கத்தை லாக்கரில் வைத்து சீல் வைத்த போது உடன் யார் யார் இருந்தனர்? சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்கம் சுரானா நிறுவனத்தின் லாக்கரில் வைக்கும் போது வீடியோ எடுக்கப்பட்டதா? சோதனை நடத்திய நிறுவனத்திலேயே 400.47 கிலோ தங்கம் வைக்க யார் உத்தரவிட்டது? கைப்பற்றப்பட்ட தங்கத்தை ஏன் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வில்லை. லாக்கர் சாவிகள் முறையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சிபிஐ ஆய்வாளர் அளித்த பதிலை வாக்குமூலமாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்து கொண்டனர். 8 மணி நேரம் நீடித்த விசாரணை மாலை 6 மணிக்கு முடிந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். சிபிஐ டிஎஸ்பி நாகேஸ்வரராவ் இன்று நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்….

The post 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: சிபிஐ இன்ஸ்பெக்டரிடம் 8 மணி நேரம் விசாரணை: தங்கத்தை லாக்கரில் வைத்த அதிகாரிகள் குறித்து சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : CBI ,Chennai ,CBCID ,Manikavel ,
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...