×

வேலூர் நேஷனல் சர்க்கிள் அருகே குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணி மந்தம் பொதுமக்கள் அவதி

வேலூர், ஜன.10: வேலூர் நேஷனல் சர்க்கிள் அருகே தொடங்கப்பட்ட குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருவதால் அவ்வழியாக சென்று வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகரின் பல்வேறு இடங்களிலும் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் தேக்கிவைத்து வாரத்தின் 2நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கென நகரின் பல்வேறு இடங்களிலும் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் தற்போது கூடுதல் எண்ணிக்கையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.

சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் அதன் உறுதிதன்மை இழந்து உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. இதையடுத்து குடிநீர் வீணாவதை தடுக்கும் விதமாக புதிதாக குடிநீர் குழாய்கள் புதைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ராட்சத குடிநீர் குழாய்கள் புதைக்க சுமார் ₹300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

தற்போது, காட்பாடி சாலை நேஷ்னல் சர்க்கிள் அருகே குடிநீர் குழாய் புதைக்கும் பணி நடந்து வருகிறது. குழாய்கள் புதைக்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் குழாய்கள் புதைக்க காகிதப்பட்டறை முதல் ஆற்காடு சாலை வரை தோண்டப்பட்ட பள்ளத்தை இரவோடு இரவாக குழாய்கள் புதைத்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியான நேஷ்னல் சர்க்கிளில் குழாய் புதைக்கும் பணி மந்தகதியில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், எச்சரிக்கை தடுப்பு வேலிகள் இல்லாமல் திறந்த நிலையில் உள்ள பள்ளத்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, வாகன போக்குவரத்து மிகுந்த நேஷ்னல் சர்க்கிள் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் புதைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Vellore National Circle ,
× RELATED தாறுமாறாக ஓடி பூங்காவில் மோதி...