×

கிராவல் மட்டும் போட்டுள்ளனர் ஒரு வருடமாக தூங்கும் சாலை பணி காரைக்குடி அருகே மக்கள் அவதி

காரைக்குடி, ஜன.9: காரைக்குடி அருகே கல்லல் பட்டணம்பட்டி சாலையில் கிராவல் மட்டும் போட்டு விட்டு தார் அமைக்காமல் ஒரு வருடமாக கிடப்பில் போட்டுள்ளனர். காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியம் செவரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது எட்டுக்குடிபட்டி, பட்டணம்பட்டி. இங்கு 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லல் மற்றும் கூத்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். காரைக்குடி முதல் கல்லல் சாலையில் இருந்து எட்டுகுடிபட்டி, பட்டணம்பட்டி, வடஆவந்திபட்டி, ஒத்தகுடியிருப்பு நடுவிக்கோட்டை சாலை வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2019 பிப்ரவரியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க ரூ.54 லட்சத்து 93 ஆயிரம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆமை வேகத்தில் நடந்த இப்பணியில் மக்களின் தொடர் கோரிக்கைக்கு பின் கிராவல் சாலை மட்டும் போட்டனர். அதன் பின்பு பணியை அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். பணி துவங்கி ஒரு வருடங்கள் ஆக உள்ள நிலையில் இதுவரை தார்ச்சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். சாலைகளில் ஆங்காங்கே கிடக்கும் கல் வாகனங்களை பதம்பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி காலம் கடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், கடந்த 15 வருடமாக இச்சாலை போடப்படாமல் இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாலை பணி துவங்கப்பட்டது. அதுவும் தார்ச்சாலையாக போடாமல் ஒரு வருடமாக கிடப்பில் கிடக்கிறது. பட்டணம்பட்டி விளக்கு ரோட்டில் இருந்து ஊருக்குள் செல்லும் வழியில் மின் கம்பங்கள் இல்லை என காரணம் காட்டி விளக்குகள் அமைக்கவில்லை. இருக்கும் தெருவிளக்குகளும் எரியாததால் இரவு நேரங்களில் நடந்து வரும் போது விஷபூச்சிகளிடம் கடி வாங்குவது வாடிக்கையாகி வருகிறது. போதிய கலெக்சன் இல்லை என கூறி அரசு டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இந்த ரூட்டில் இயங்கி வந்த மினி பஸ்சும் தற்போது இயங்கவில்லை. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் முதல் உடல்நிலை சரியில்லாதவர்கள் வரை அனைவரும் 4 கி.மீக்கு மேல் நடந்து வந்துதான் பஸ் ஏற வேண்டிய நிலையில் உள்ளனர். சாலையில் தெருவிளக்குகள் அனைத்தும் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தார்ச்சாலை அமைப்பார்களா அல்லது தார் சாலை அமைத்ததாக பில் போட்டு எடுத்துவிட்டார்களா என சந்தேகம் எழுந்துள்ளது என்றனர்.

Tags : Karaikudi ,road work ,
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்