×

நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் கம்பம், கூடலூரில் 116 பேர் கைது

கம்பம், ஜன, 9: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில், கம்பம், கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 116 பேரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் நேற்று பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நாகராஜன், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுந்தராஜன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் நகரத் தலைவர் ஜீவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தங்கம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்களின் உரிமைக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கம்பம் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். அதுபோல் கூடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு ஜெயராஜ், ஏரியா கமிட்டி உறுப்பினர் ஜெயன், முத்துப்பிள்ளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜூ, ராமர் கர்ணன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மத்திய அரசைக்கண்டித்து கோசம் எழுப்பி கூடலூர் பழைய பஸ்டாண்டிலிருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் புது பஸ்டாண்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலலில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட 41 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்