×

நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் எல்லைப்பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

கூடலூர், ஜன. 9: தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் போக்கை கண்டித்து நேற்று தொழிலாளர் நல அமைப்புகள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில், தமிழக கேரள எல்லைப்பகுதியில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர். தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசிடம் ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை தொழிலாளர் நல அமைப்புகள் முன்வைத்தன. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் நேற்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிஐடியூ, ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களும், பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்புகளும் பங்கேற்றன.

வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு தமிழக கேரள எல்லையான குமுளியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஆட்டோக்கள் ஓடவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், இந்த போராட்டத்தால் ஐயப்ப பக்தர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழக கேரள எல்லை குமுளியில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னிட்டு, கம்பத்திலிருந்து கேரளப்பகுதியான கட்டப்பனை, நெடுங்கண்டம், மேட்டுக்குழி, ஏலப்பாறை பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அதுபோல் கட்டப்பனை, வண்டிப்பெரியாறு பகுதியிலிருந்து கம்பம் வரும் கேரள அரசு பஸ்களும் வரவில்லை. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு செல்லவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : strike action ,border ,
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது