×

அவனியாபுரம்.பாலமேடு,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமா? ஆன்லைன் பதிவுக்கு கடும் எதிர்ப்பு

மதுரை, ஜன.9: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டு முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்யும்படி அதிகாரிகள் புது நிபந்தனை விதித்து சிக்கல் உண்டாக்குவதாக காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டி பந்தயம் களைகட்டும். பொங்கல் பண்டிகையான ஜனவரி 15ம் தேதி மதுரை அவனியாபுரம், 16ம் தேதி பாலமேடு, உச்சகட்டமாக 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடக்கிறது. இதில் பங்கேற்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து தயாராகி வருகின்றனர். அதேபோல் காளைகளை அடக்கும் வீரர்களும் தயாராகி வருகின்றனர். தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றிய பிறகு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பதிவு செய்து அனுமதிக்கும் நடைமுறை இருந்தது. தகுதியான காளைகள் மருத்துவ பரிசோதனை செய்து அனுமதிக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு முதன்முறையாக புது நிபந்தனையை அதிகாரிகள் விதித்துள்ளனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை அதன் உரிமையாளர் ஆதார் கார்டு மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அம்மாதிரி பதிவு செய்யாத காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு 4 ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டில் காளைகளின் எண்ணிக்கை குறைத்து, அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தையும் சுருக்க திட்டமிட்டு, ஆன்லைன் பதிவு புகுத்தப்படுகிறதோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. வழக்கமாக பதிவு செய்யும் காளைகளுடன், அதிகாரிகளிடம் சென்று பதிய முடியாமல் ஏராளமானோர் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். ஆன்லைனில் கேட்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பதிவு செய்ய முடியாமல் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வீரர்கள் கூறும்போது, “உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அரசு தனிச்சட்டம் இயற்றி, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக ஆன்லைன் பதிவு என்பது ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து போகும். ஆன்லைனில் பதிய தவறினால் ஜல்லிகட்டில் பங்கேற்க முடியாது என்று அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். ஒரு காளையை ஆதார் மூலம் பதிவு செய்தவர், இன்னொரு காளையை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இது சிக்கலானது. அரசு உடனடியாக தலையிட்டு, ஆன்லைன் பதிவை நிறுத்தி, ஏற்கனவே இருந்த வழக்கப்படி தகுதியான மாடுகள் அனைத்தையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டரிடம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

Tags : Avaniapuram ,Palamedu ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...