×

மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நேரத்தை வீணடிக்கும் போலீசார்

மதுரை, ஜன. 9: மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பாஸ் கொண்டு வருவோரை போலீசார் தனி நோட்டில் பதிவு செய்து உள்ளே அனுப்புவது அவர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கோயிலுக்கு வந்து சுற்றி பார்த்து விட்டு செல்கின்றனர். புத்தாண்டு தினத்தன்று நகரில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பாஸ் ஒன்றில் தனது உறவினர்களை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு பணியில் இருந்த கோயில் உதவி கமிஷனர் ஒருவருக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலில் முடிந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தனது அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே கோயில் ஊழியர்கள் உள்ளே வரும்போது அடையாள அட்டையுடன் வரவேண்டும் என போலீசார் கடுமையாக உத்தரவிட்டனர். அதேபோல் போலீசார் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் பாஸ் இல்லாமல் தரிசனத்திற்கு வந்ததால் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என கோயில் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த இரு தரப்பினரிடமும் மோதல் போக்கு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் பல்வேறு துறையில் இருந்து வரும் நபர்கள் கோயில் நிர்வாகத்திடம் சுவாமி தரிசனம் செய்ய ‘பாஸ்’ எழுதி வாங்கி கொண்டு வருகின்றனர். இவர்களை எஸ்ஐ தலைமையில் ஒருவர் அம்மன் தரிசனம் செய்ய உள்ளே செல்லும் இடத்தில் பாஸ் கொண்டு வரும் நபர்களை முழுமையாக விசாரணை நடத்தி எத்தனை நபர்கள், பாஸ் கொடுத்தது யார்? என தனி நோட்டில் பதிவு செய்து கொண்டு உள்ளே அனுப்புகின்றனர். இதனால் பாஸ் கொண்டு வருவோர், போலீசார் மீது கடும் கோபத்துடன் செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து சுவாமி தரிசனம் செய்ய வந்த பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘‘கோயிலில் பாஸ் வாங்கி கொண்டு சுவாமி தரிசனம் செய்ய வரும் எங்களை வழிமறித்து போலீசார் சோதனை என்ற பெயரில் நேரத்தை வீண் செய்கின்றனர். பாஸ் கொடுத்தது யார் என்ற விபரங்களை சேகரித்து நோட்டில் பதிவு செய்து, உள்ளே அனுப்புகின்றனர். வெளியில் அவர்கள் சோதனை போடுவது சரி உள்ளே இதுபோன்று விசாரணை நடத்துவது அதிருப்தியளிக்கிறது. இது தொடர்பாக கேட்டால் போலீஸ் கமிஷனர் தான் பதிவு செய்ய உத்தரவிட்டதாக கூறுகின்றனர். இதுதொடர்பாக முழு விசாரணை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

Tags : devotees ,Meenakshiamman temple ,darshan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி...