×

மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 733 பேர் கைது

சேலம், ஜன.9:  மத்திய அரசை கண்டித்து சேலத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் 733 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாநகரில் ஆட்டோக்கள் முற்றிலும் இயங்காததால் மாணவர்கள் பள்ளிக்கு  செல்வதில் பெரும் சிக்கலை சந்தித்தனர்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து, நாடு முழுவதும் அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. அதன்படி நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. சேலம் மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் 1100 அரசு பஸ்கள் இருக்கிறது. இதில் பணியாற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து ஆளுங்கட்சி டிரைவர்கள், கண்டக்டர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டது. சேலம் உருக்காலையில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலானோர், பணிக்கு செல்லவில்லை. இதனால் பணிகள் முழுஅளவில் பாதிக்கப்பட்டது. சேலம் மாநகரில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 100 சதவீத ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

காலையில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோக்கள், முழு அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் பெற்றோர் டூவீலர்களில் ஏற்றிச்சென்றனர். இதனால் பள்ளிகள் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே  போல காலை நேரங்களில் பஸ் நிலையங்களுக்கு ஆட்டோவில் செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்கமான ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப், ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியூ ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து மறியல் போராட்டம் நடத்தின. இதில், தொழிற்சங்கத்தை சேர்ந்த வடமலை, நடராஜன், விமலன், வெங்கடபதி, தியாகராஜன், பன்னீ ர்செல்வம், பொன்னி பழனியப்பன், பசுபதி, செல்வ சிங், வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூ.மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களும் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதில், 305 பெண்கள் உட்பட 671 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சேலம் அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, நஞ்சம்பட்டி உட்பட 6 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேட்டூர்: மேட்டூரில்  சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி இளங்கோவன் தலைமையில் மறியல் போராட்டம்  நடந்தது. மேட்டூர் அரசு மருத்துவமனை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று,  மேட்டூர் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற 2 பெண்கள் உட்பட 62 பேரை  போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

போராட்டம் காரணமாக பாதிப்பு  ஏதும் ஏற்படவில்லை. மேட்டூரில் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. கடைகள்  செயல்பட்டன. அரசு அலுவலகங்களில் பெரும்பாலான பணியாளர்கள்  பணிக்கு வரவில்லை. ஏற்காட்டில், பொது வேலை நிறுத்ததிற்கு ஆதரவு தெரவித்து சாலையோர கடைகள் மூடப்பட்டன. படகு  இல்ல சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள்  மூடப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. இடைப்பாடி:இடைப்பாடியில் மத்திய அரசை கண்டித்து நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று ஆட்டோக்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள் சிரமமடைந்தனர். இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தவிர்த்து மற்ற அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், வங்கிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

Tags : road blocking ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில்...