×

மத குறியீடுகளை ஒளிரவிட்ட விவகாரம் பல்கலை. பணியாளர் மீது சைபர் கிரைமில் புகார்

சேலம், ஜன.9: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத குறியீடுகளை ஒளிரவிட்ட விவகாரம் தொடர்பாக, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா,கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி நடந்தது. ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு, மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் தங்க பதக்கங்களை வழங்கினார். இதனிடையே, பட்டமளிப்பு விழாவையொட்டி பல்கலைக்கழகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அப்போது, மத குறியீடுகள் சார்ந்த விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பின்புறத்திலேயே,சூலம்,ஓம்,விநாயகர் போன்ற விளக்குகள் ஒளிர்ந்தன. இதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதனை அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில்  கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் மத குறியீடுகளை ஒளிரவிட்டதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக, தொகுப்பூதிய பணியாளர் ஒருவர் மீது, சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசாரும் அவரை விசாரித்து அனுப்பினர். பல்கலைக்கழக நிர்வாகம் தொகுப்பூதிய பணியாளர்களை மிரட்டும் வகையில்,இந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகத்தின் பல்வேறு சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக பணியாளர்கள் கூறியதாவது: பல்கலைக்கழக நிர்வாகத்தின், தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பட்டமளிப்பு விழாவின்போது, தொடர்ந்து 3 நாட்கள் பல்கலைக்கழகத்தில் அலங்கார விளக்குள் ஒளிர  விடப்பட்டிருந்தன. இதனை பலரும் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தனர்.மதம் சார்ந்த குறியீடுகளுக்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், தொகுப்பூதிய பணியாளர் ஒருவர் இதனை செய்ததாக அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரின் மூலம்,மற்ற பணியாளர்களை மிரட்டி பணிய வைக்கலாம் என்ற எண்ணத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

பதிவாளராக இருந்த அங்கமுத்து, தனது தற்கொலை கடிதத்தில் சில பெயர்களை குறிப்பிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் உயிரிழந்து 2 ஆண்டுகளாகியும் அதன்மீது நடவடிக்கை இல்லை. இதுதவிர, போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரம், போலி பில் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு என பல விவகாரங்கள் கிடப்பில் உள்ளன. ஆனால்,மத குறியீடு ஒளிரவிட்ட விவகாரத்திற்கு மட்டும் அவசரம் காட்டுவது,நிர்வாகத்தின் மீது  பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பொதுவாக,அரசுப்பணியில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் மதச்சார்பின்மையோடு நடந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்,பதிவாளர் ஆகியோர் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், மத கோட்பாடுகளின் அடிப்படை விதிகளை மீறியுள்ளனர். எனவே, பல்கலைக்கழக அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இருவரின் மீது புகார் அளிக்கவுள்ளோம்.மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கு இனியும் தொடரும் பட்சத்தில்,போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Universities ,
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!