×

சேலத்தில் கொலை முயற்சி வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக சிங்கப்பூரில் இருந்தவர் கைது

சேலம், ஜன.9: சேலத்தில் கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வெளியேச் சென்று, 9 ஆண்டுகள் சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், கொண்டேந்தல்பட்டியை சேர்ந்தவர் பழனிச்செல்வம் (42). இவர், கடந்த 2001ம் ஆண்டு, சிவகங்கையில் குற்றச்செயலில் ஈடுபட்டு விட்டு சேலம் வந்து நாராயண பிள்ளை தெரு பகுதியில் பதுங்கி இருந்தார். அப்போது, அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்றார். ஆனால், போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பிடிக்க வந்த போலீசாரை வெட்டியது பற்றி பள்ளப்பட்டி போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்திருந்தனர். சில ஆண்டுகளில் நீதிமன்றத்தில் பழனிச்செல்வம் ஜாமீன் பெற்றார். பின்னர், அவர் சேலம் கோர்ட்டில் நடந்து வரும் கொலை முயற்சி வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த 2011ம் ஆண்டு, தலைமறைவான பழனிச்செல்வத்தை கைது செய்து ஆஜர்படுத்த, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார், பழனிச்செல்வத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, சிவகங்கையில் உள்ள தனது வீட்டிற்கு பழனிச்செல்வம் வந்திருப்பதை அறிந்த பள்ளப்பட்டி சிறப்பு எஸ்ஐ கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று, அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் கடந்த 9 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 9 ஆண்டுகள் சிங்கப்பூரில் பதுங்கி இருந்த குற்றவாளியை, நாடு திரும்பியதும் கைது செய்த போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பாராட்டினார்.

Tags : Singapore ,Salem ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து...