×

சேலம் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு கல்பாரப்பட்டி ஊராட்சி தேர்தலில் பதிவான 1,260 வாக்குகள் எங்கே?

சேலம், ஜன.9: சேலம் கல்பாரப்பட்டி ஊராட்சி தேர்தலில் பதிவான 1,260 வாக்குகள், எண்ணிக்கையின்போது எங்கே சென்றது? என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை எனவும், சில பகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் கூட மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தும், மறு வாக்கு எண்ணிக்கை கோரவில்லை என கூறியுள்ளார். ஆனால், சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் போது, ஆளும் அதிமுகவினரின் தலையீடு காரணமாக முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை செல்லாது என அறிவித்துள்ளனர். பதிவான வாக்குகள், பெட்டிகளுடன் மாயமாகியுள்ளது.

உதாரணத்திற்கு, வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பாரப்பட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, திமுகவை சேர்ந்த செல்வி போட்டியிட்டார். பதிவான வாக்குகள் 2ம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரான வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அறிவித்தார். அதில், கல்பாரப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 4,253 வாக்காளர்கள் உள்ளதாகவும், அவற்றில் பதிவான வாக்குகள் 2,590 எனவும், செல்லத்தக்க வாக்குகள் 2,504 எனவும், 86 வாக்குகள் செல்லாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்லத்தக்க வாக்குகளில் வேட்பாளர்களான சாந்தா- 883, பாக்கியலட்சுமி -22, செல்வி - 678,  சாரதா- 2, ராஜம்மாள்- 919 வாக்குகளும் பெற்றதாக தெரிவித்தார். இதில், அதிமுகவை சேர்ந்த ராஜம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. அதற்கு வலுவான ஆதாரம் உள்ளது. அதாவது, கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் அளித்துள்ள வாக்குச்சீட்டு கணக்குகளுக்கும், தேர்தல் நடத்தும் அலுவரான ஆணையாளரின் அறிவிக்கையிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. 6 வாக்குச்சாவடிகளின் அலுவலர்கள் அறிவித்துள்ள படிவம்-20ன்படி வாக்குச்சாவடி எண் 91ல் பதிவான வாக்குகள் 913, 92ல் - 551 வாக்குகள், 93ல் - 707 வாக்குகள், 94ல் - 418 வாக்குகள், 95ல் - 382 வாக்குகள், வார்டு எண்.2 மற்றும் 3க்கு சம்மந்தப்பட்ட வாக்குச் வடியில் 879 என மொத்தம் 3,850 வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆணையாளரின் அறிக்கையின்படி பதிவான வாக்குகள் 2,590 மட்டுமே. மீதமுள்ள 1,260 வாக்குகள் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. மாயமாக மறைந்து விட்ட 1,260 வாக்குகளை கணக்கில் சேர்க்காமலேயே, 919 வாக்குகள் பெற்ற ராஜம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான 1,260 வாக்குகளையும் சேர்த்து எண்ணியிருந்தால், திமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். இது முறைகேடா, இல்லையா என்பதை முதல்வர் தான் விளக்கம் அளிக்க வேண்டும். இது ஒரு உதாரணம் தான். இது போலவும், மற்ற வழிகளிலும் பல்வேறு முறைகேடுகளை செய்தே, பல இடங்களில் திமுகவின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம் புகார்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், பாதிக்கப்பட்ட பலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை அளிக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இவ்வாறு வீரபாண்டி ராஜா கூறியுள்ளார்.

Tags : Salem ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...