×

மத்திய பாஜ அரசை கண்டித்து மாவட்டத்தில் 6 இடங்களில் மறியல் போராட்டம்

நாமக்கல், ஜன.9: மத்திய  அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 275 பேரை போலீசார் கைது செய்தனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிகள் வெறிச்சோடி, பணிகள் முற்றிலுமாக முடங்கியது. மத்திய  அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாமக்கல் பூங்கா சாலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி  கோஷமிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 28 பேரை, நாமக்கல் போலீசார்  கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில்  அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 திருச்செங்கோட்டில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு, மத்திய தொழிற்சங்கத்தின்  சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில  கட்டுப்பாட்டு குழு  உறுப்பினர் மணிவேல் தலைமையில், போராட்டம் நடந்தது.  மறியலில் ஈடுபட்ட 78 பெண்கள் உள்ளிட்ட  168 பேரை போலீசார்  கைது செய்தனர். இதேபோல் சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎப்   தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு கண்டன  ஆர்ப்பாட்டம்  நடந்தது. ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர்  கந்தசாமி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. ராசிபுரம், வெண்ணந்தூர் பிரதேச செயலாளர் செல்வராசு, நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் சின்னசாமி, சிஐடியூ தொழிற்சங்க தலைவர்கள் சங்கரன், பழனிவேல், முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, நாகா, ரவிநாத், கண்ணன் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய செயலாளர்  பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 பள்ளிபாளையத்தில் தபால் அலுவலகம் முன்பு, சிஐடியூ மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் அசோகன் தலைமையில் மறியல் நடைபெற்றது.

இதில் முத்துகுமார், ரவி, மோகன், காசிவிஸ்வநாதன், ஏஐசிசிடியூ தொழிற்சங்க பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லங்காட்டு வலசில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் படைவீடு பெருமாள் தலைமையில், சங்க தலைவர் துரைசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். குமாரபாளையத்தில் ஏஐடியூசி தொழிற்சங்க தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் போராட்டம் நடந்தது. ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், எச்எம்எஸ் மாநில துணைத்தலைவர் செல்வராஜ், ஏஐசிசிடியூ மாநில செயலாளர் சுப்ரமணி, சிஐடியூ பாலுசாமி, எல்பிஎல் அருள்ஆறுமுகம், ஐஎன்டியூசி ஜானகிராமன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் சேகர், நகர செயலாளர் வெங்கடேசன், துணைச்செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், குமாரபாளையத்தில் நேற்று மறியல் நடைபெற்றது.  மாவட்டம் முழுவதுமாக 6 இடங்களில் நடைபெற்ற மறியல்  போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் 275  பேர்  கைது செய்யப்பட்டனர்.

வேலைநிறுத்த  போராட்டம் காரணமாக, மாவட்டத்தில் உள்ள 145 வங்கிகளில் பணிகள்  பாதிக்கப்பட்டன. வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. உயர்  அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். பல கோடி வர்த்தம் வங்கியில்  நேற்று ஒரே நாளில் முடங்கியது. ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக  நேற்று வங்கிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும்  உள்ள தபால் அலுவலகங்களில் 11 பேர்  மட்டும் பணிக்கு வந்தனர். சுமார் 770 பேர் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக, மணியார்டர்  அனுப்புவது தபால் பட்டுவாடா   பாதிக்கப்பட்டது.  மாவட்டம் முழுவதும்  பஸ்கள், லாரிகள் ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடியதால், பொதுமக்களின் இயல்பு  வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

Tags : Strike ,places ,district ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து