×

வார்டு வரையறை குளறுபடியால் தேர்தலில் தனக்கே ஓட்டு போட முடியாத வேட்பாளர் வெற்றி

பள்ளிபாளையம், ஜன.9: பள்ளிபாளையம் ஒன்றியத்தில், வார்டு வரையறை குழப்பத்தால், தனது சின்னத்திற்கே வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த வேட்பாளர், நேற்று மீண்டும் நடந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் களியனூர் அக்ரஹாரம் ஊராட்சி மன்றத்தின் 6வது  வார்டு உறுப்பினர் தேர்தலில், மோகன்குமார் என்பவர் போட்டியிட்டார். இவருக்கு தேர்தலில் சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தீவிர பிரசாரம் மேற்கொண்ட மோகன்குமார், வாக்கு பதிவு நாளில் ஓட்டு போட சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. 5வது வார்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள மோகன்குமாருக்கு, 6வது வார்டில் வாக்களிக்க முடியாது என கூறி, அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். ஊரெல்லாமல் சீப்பு சின்னத்துக்கு வாக்கு சேகரித்த வேட்பாளர், தனது சின்னத்திற்கே ஓட்டு போட முடியாமல் வார்டு மாறி, வேறு ஒருவருக்கு ஓட்டு போட்டு விட்டு திரும்பினார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போதும் 6வது வார்டு ஊராட்சி உறுப்பினர் ஓட்டுகளை எண்ணி அறிவிக்க, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர் என வாக்கு சீட்டுகளை பிரித்த பின்னரும், 6வது வார்டு ஓட்டு சீட்டுகள் மட்டும் எண்ணப்படாமல் மூட்டை கட்டி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு பின்னர் முடிவெடுப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 6வது வார்டுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென அதிகாரிகள் அறிவித்தனர். ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட 6வது வார்டு வாக்கு சீட்டுகள், ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து பாதுகாப்போடு கொண்டு வரப்பட்டு, நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பதிவான 130 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. முடிவில் மதியழகன் 24 வாக்குகளும், கருப்புசாமி 16 வாக்குகளும், மணிகண்டன் 28 வாக்குகளும் பெற்றிருந்தனர். 58 வாக்குகளை பெற்ற மோகன்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் அதிகாரி அலமேலு  சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து மோகன்குமார் கூறுகையில், ‘வேட்புமனு தாக்கல் செய்தபோது, எனது ஓட்டு 6வது வார்டில் தான் இருந்தது. ஓட்டு போட சென்ற போது, வாக்காளர் பட்டியலில் எனது ஓட்டு 5வது வார்டு பட்டியலில் மாறி இருந்தது. எனக்கே வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமாக இருந்தது,’ என்றார். இதுகுறித்து தேர்தல் அதிகாரி அலமேலு கூறுகையில், ‘துணை வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது, அதில் இந்த குழப்பம் நிகழ்ந்துள்ளது,’ என்றார்.

Tags : candidate ,election ,
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 23 வேட்பாளர் மனுக்கள் ஏற்பு