×

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.9:  மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தால், சுமார் ₹60 கோடி மதிப்பிலான வங்கி பரிவர்த்தனை முடங்கியது.
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், நாடு முழுவதும் நேற்று (8ம் தேதி) ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திடடத்தை ரத்து செய்தல், அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 148, தனியார் வங்கிகள் 40, கூட்டுறவு வங்கிகள் 120, தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கிகள் 21, கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கிகள் 4 என மொத்தம் 333 வங்கி கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூர் பகுதியில் சுமார் ₹60 கோடி மதிப்பிலான வங்கி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

 இந்த போராட்டத்தில் எல்ஐசி ஊழியர் சங்கம், தேசிய தபால், தந்தி சம்மேளனம், வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபட்டதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி இருந்தது. வேலை நிறுத்த போராட்டம் குறித்து அறியாத வாடிக்கையாளர்கள், வங்கிக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். போராட்டத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கி இயங்கின. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு அனைத்து மோட்டார் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்து, தொடங்கி வைத்து பேசுகையில், ‘மோடி அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தால் அரசு போக்குவரத்து அழிக்கப்படும். ஆட்டோ, டாக்ஸி, சிறு வாகனங்கள் வைத்து தொழில் நடத்துவோர் வாழ்வு சூறையாடப்படும். எனவே, இந்த கொள்கைகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்,’ என்றார்.

இதில், தொமுச பேரவை செயலாளர் கிருஷ்ணன், கவுன்சில் தலைவர் பன்னீர்செல்வம், மின்கழக தொமுச பசவராஜ், நியாயவிலை கடை மோகன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முருகேசன், டாஸ்மாக் ரவிச்சந்திரன், சலவை தொழிலாளர் சங்கம் சிவக்குமார் மற்றும் ஐஎன்டியூசி, சிஐடியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அண்ணா சிலை எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட தொமுச நிர்வாகிகள் உள்ளிட்ட 143 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Tags : Strike ,district ,government ,
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...