×

வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் சாலை மறியல்

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில், 261 பெண்கள் உள்பட 782பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமை சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ போராட்டத்தை தொடங்கி வைத்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். தொமுச மண்டல நிர்வாகி சின்னசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராசன், தொமுச மாவட்ட செயலாளர் அன்புமணி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மணி, ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமை, கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்டுதல், பொருளாதார நெருக்கடியால் வேலை இழக்கும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும், விவசாயிகளை பாதுகாக்க எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமலாக்க வேண்டும், கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர்சங்கம், வாலிபர் சங்கம் மாணவர் சங்கம் ஆகிய சங்கங்கள் வேலைநிறுத்த மறியல் போராட்டம், தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது. விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான டில்லிபாபு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த இரண்டு மறியல் போராட்டத்திலும் மொத்தம் 165 பெண்கள் உள்பட 498 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அரூர்: அரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து தலைமை வித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன், தொமுச மாவட்ட தலைவர் பழனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன் ஆகியோர் பேசினர். மறியலில் ஈடுபட்ட 81 பெண்கள் உள்பட 195 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பென்னாகரம்: பென்னாகரத்தில் நடந்த மறியல் போராட்டத்திற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை வகித்தார். இதில், 18 பெண்கள் உள்பட 89 பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி, அரூர், பென்னாகரம் ஆகிய மூன்று இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில், 261 பெண்கள் உள்பட 782பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரியில் கைது செய்து அடைக்கப்பட்ட சிலருக்கு, மதிய உணவு வழங்கவில்லை இதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் உணவு தாமதமாக வழங்கப்பட்டது.

Tags : Road rally ,district ,strike ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்