×

தர்மபுரியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை அகற்ற எதிர்ப்பு

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி நகராட்சிக்கு சொந்தமான வாடகை கடைகளை, ஆக்கிரமிப்பு என நெடுஞ்சாலை துறையினர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்காவையொட்டி, நகராட்சி சார்பில் 15 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாதந்தோறும் நகராட்சி வாடகை வசூலித்து வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி, தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று, நெடுஞ்சாலைதுறை உதவி கோட்டப்பொறியாளர் குலோத்துங்கன் தலைமையில், பணியாளர்கள் ராஜகோபால் பூங்கா அருகே உள்ள 15 கடைகளை அகற்றுமாறு பொக்லைனுடன் சென்றனர். இதற்கு 15 கடை உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக, உதவி கோட்ட பொறியாளருடன் கடை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொங்கல் முடிந்ததும், கடைக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன்பின்னர் எங்களது முடிவை தெரிவிக்கிறோம் என அதிகாரிகளிடம் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றுவது ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கூறியதாவது:
தர்மபுரி பஸ் நிலையம் அருகே, ராஜகோபால் கவுண்டர் பூங்காவை ஒட்டி இருந்த காலி இடத்தில், கடந்த 1983ம் ஆண்டு முதல் துணி, செருப்பு கடைகள் என 15 கடைகள் நடத்தி வந்தோம். கடந்த 1991ம் ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் வந்த போது, நீதிமன்ற ஆணை பெற்று ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு தடை ஆணை பெற்றோம். மேலும், இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமானது என்றும், நெடுஞ்சாலைக்கு பாத்தியப்பட்டது அல்ல என்றும் நிரூபித்தோம். இதையொட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகள் என, நகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதன் ெதாடர்ச்சியாக நகராட்சிக்கு நாங்கள் 15 பேரும், மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகிறோம். தற்போது ஒரு மாத வாடகையாக ₹18 ஆயிரம் நகராட்சிக்கு செலுத்தி வருகிறோம். இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் 6 மாதத்திற்கு முன்பு மீண்டும் எங்கள் கடைகளின் மேல்கூரையை மட்டும் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் கொடுத்தனர். இன்று (8ம் தேதி) கடைகளை அகற்ற, பொக்லைனுடன் அதிகாரிகள் வந்தனர். நகராட்சியில் வாடகை கட்டி வரும் நிலையில், நெடுஞ்சாலை துறையினர் எந்த ஆதாரமும் இன்றி தங்களுக்கு சொந்தமானது என, எங்கள் கடைகளை அகற்ற நினைக்கின்றனர். இது தொடர்பாக நகராட்சி கமிஷனரை சந்தித்து விளக்கி உள்ளோம் என கூறினர்.

Tags : shops ,Dharmapuri ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி