×

காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க வயலுக்கு பிளாஸ்டிக் கவர்களால் தோரணம்.

நல்லம்பள்ளி, ஜன.9: நல்லம்பள்ளி அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க, விவசாய நிலத்தின் மேல் பிளஸ்டிக் கேரி பேக்குகளை கொண்டு தோரணம் போல் கட்டி வைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம்புதூர் கோம்பை, காமராஜர்நகர், காட்டுகொல்லை உள்ளிட்ட கிராமங்கள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் ராகி, அவரை, துவரை, தக்காளி, நெல், சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மலை அடிவாரத்தில் விவசாய நிலம் உள்ளதால், இரவு நேரங்களில் மலைப்பகுதியிலிருந்து வரும் காட்டு பன்றிகள், விளை நிலங்களில் புகுந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்களை நாசம் செய்வது வழக்கமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் விளைநிலங்களின், மேல் பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கொண்டு தோரணம் போல் கட்டி வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இரவு நேரங்களில், உணவு தேடி வரும் காட்டுப்பன்றிகள் கூட்டம் பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை தடுக்க வேண்டும் என, வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, தோட்டங்களை சுற்றி புடவைகளால் வேலிகள் அமைத்தும், பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வயல்களின் மேல் தோரணம் போல் கட்டியும் பயிர்களை பாதுகாத்து வருகிறோம். காற்று வீசும் போது, பிளாஸ்டிக் கவர்களில் ஏற்படும் சத்தத்தால், ஆட்கள் இருப்பது போன்ற தோற்றம் உருவாகும். இதனால், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் இருந்து காட்டு பன்றிகள் வருவதும், பயிர்கள் சேதமும் குறைந்துள்ளது,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா