×

தாராசுரத்தில் இருந்து தஞ்சை வரை சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

பாபநாசம், ஜன. 9: தாராசுரத்தில் இருந்து தஞ்சை வரை சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும். கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம், கோயில்கள், வணிகம் உள்ளிட்டவற்றுக்காக தினம்தோறும் ஏராளமான பக்தர்கள், வணிகர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலை குறுகலாகவும், குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. சேதமடைந்த சாலையில் அவ்வபோது பேட்ஜ் ஒர்க் பார்த்தாலும் அடுத்த சில வாரங்கள் சேதமடைந்து விடும். தற்போது சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கும்பகோணம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கும்பகோணத்துக்கு வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி பிள்ளையார் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் உள்ளிட்டவற்றுக்கு செல்ல விரும்புவர். கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் வழியாக திருவலஞ்சுழி காரில் செல்வதற்குள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சோர்ந்து விடுவர். அந்தளவுக்கு சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதேபோன்று தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்களும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இந்த சாலை ஏராளமான திருப்பங்களை உடையது. இந்த சாலையில் தாராசுரம் துவங்கி அய்யம்பேட்டை வரை ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகி போக்குவரத்து பாதிப்பு ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் ஆங்காங்கே குண்டும், குழியுமான சாலையாக உள்ளது. எனவே கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் இருந்து தஞ்சை வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான முறையில் அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,Darasuram ,Tanjore ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி