×

அரியலூர், ஜெயங்கொண்டத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாலை மறியல்

அரியலூர், ஜன. 9: அரியலூர், ஜெயங்கொண்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. கார்ப்பரேட், பெருமுதலாளிகளுக்கு ஆதரவான தொழிலாளர் நலச்சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தேசத்தை பாதுகாக்கும் வங்கி, இன்சூரன்ஸ், தொலைதொடர்பு, ரயில்வே, பாதுகாப்பு தொழிற்சாலைகள், சேலம் உருக்காலை, போக்குவரத்து, மின்சாரம், நுகர்பொருள் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு விற்க கூடாது. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.21 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது. பொருளாதார வீழ்ச்சிக்கு இடமளிக்க கூடாது. கிராமப்புற மக்களின் 100 நாள் வேலையை முறைப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு திட்டத்தை முடக்க கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடநதது.அதன்படி அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கள் ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி, ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் தமிழ்மணி, சிஐடியூ மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், தொமுச மாவட்ட கவுன்சிலர் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தனர். இதைதொடர்ந்து பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட 48 பெண்கள் உட்பட 154 பேரை அரியலூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் கைத்தறி மற்றும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார். மின்வாரிய தொழிலாளர் கண்ணன், கைவினைஞர் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தொழிலாளர் முன்னேற்ற சங்க பிரதிநிதிகள் கொளஞ்சி, சேகர், சிஐடியூ சங்க நிர்வாகி நீலமேகம் முன்னிலை வகித்தனர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் உத்திராபதி பேசினர். மறியல் போராட்டத்தை சிபிஎம் மாவட்ட செயலாளர் மணிவேல் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 83 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Tags : Federation of Trade Unions ,Ariyalur ,Jayankondam ,
× RELATED அரியலூர் நகராட்சி சார்பில் 100 சதவீத...