×

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தால் அரியலூர் மாவட்டத்தில் வங்கி சேவைகள் பாதிப்பு

அரியலூர், ஜன. 9: தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள காப்பீடு மற்றும் வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி ஐஎன்டியூசி, ஏஐடியூசி, எச்எம்எஸ், சிஐடியூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தபோதிலும் எதிர்க்கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.

தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு ஏஐடியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப், எச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. வருமான வரித்துறை, கணக்கு தணிக்கைத்துறை, அஞ்சல் துறை ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்கவில்லை. குறைந்த அளவிலான ஊழியர்களே வந்திருந்தனர். குறிப்பாக எல்ஐசி மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்றதால் அரியலூர் மாவட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. சில வங்கிகளில் கிளை மேலாளர்கள் வங்கியை திறந்து வைத்திருந்த போதிலும் ஊழியர்கள் பணிக்கு வராததால் பணம் போடவோ, எடுக்கவோ முடியவில்லை. காசோலை பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டன.

Tags : Ariyalur district ,trade unions ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...