×

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்க கூட்டமைப்பு மறியல் போராட்டம்

நாகை, ஜன.9: மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல் மற்றும் ஒரு இடத்தில் முற்றுகை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் பொருளாதார நெருக்கடியால் வேலையிலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்-.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். நகர்புற மக்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்த 100 நாள் வேலை திட்டத்தை விரிவுப்படுத்தவேண்டும். அதற்கு தேவையான நிதியை உடனே வழங்கவேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நிரந்தரத்தன்மையுள்ள பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத்தொழிலாளர்கள், கேசுவல் போன்ற தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரயில்வே, சேலம் ஸ்டீல், வங்கி , இன்ஸ்சூரன்ஸ், தொலைத்தொடர்பு , பாரத்பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி., போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்து மாநில உரிமைகளை பறித்து, பொதுபோக்குவரத்தை அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதை நிறுத்தவேண்டும். முறைசாரா நல வாரிய பயன்களை தாமதமின்றி வழங்கவேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கவேண்டும். கூட்டுறவு துறையினை மேம்படுத்தவேண்டும். கூட்டுறவு சக்கரை ஆலைகளை இயக்கவேண்டும். ரேஷன் விநியோகத்தை சீர்குலைக்கக்கூடாது. சாலையோர வியாபாரிகள், சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிக்ககூடாது. குடிநீர் திட்டங்களில் பணிபுரியும் உழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஎப், சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஏஐசிசிடியூ ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடுமுழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

நாகை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட செயலாளர் சீனிமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் மகேந்திரன் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் நாகை மாவட்டம் சிக்கல் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று பகல் 12.30 மணி அளவில் கடலூரில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்ற வந்த சரக்கு ரயிலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகைமாலி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகைமாலி, ஒன்றிய செயலாளர்கள் பகு, ஜெயராமன், ஜெயபால் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி, மாவட்ட குழு ராஜேந்திரன், சுபாசந்திரபோஸ். அபுபக்கர் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட70 பேரை கீழ்வேளூர் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் 7 பெண்கள் உட்பட 200 பேரை கைது செய்தனர். வேதாரண்யம் அருகே விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சாமிநடராஜன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் 50 பேரை கைது செய்தனர். ஆலங்குடி அருகே சாலை மறியல் நடத்திய 3 பெண்கள் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். தரங்கம்பாடி: நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தரங்கம்பாடி அருகே ஆக்கூர் முக்கூட்டில் நடந்தது. மாநில குழு உறுப்பினர் வாலண்டினா தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சிம்சன், கலைச்செல்வி, ராசைய்யன், ரவிச்சந்திரன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 20 நிமிடங்கள் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சென்னை, கடலூர், சிதம்பரம், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருநள்ளார் உள்ளிட்ட மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 100பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Trade union federation fight ,government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...