×

கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் தரங்கம்பாடி அருகே புவியீர்ப்பு விசை மூலம் நெல் சாகுபடி செய்து விவசாயி சாதனை

தரங்கம்பாடி, ஜன.9: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புவியீர்ப்பு விசைமூலம் நெல் சாகுபடி செய்து விவசாயி சாதனை புரிந்துள்ளதை தமிழர் விவசாயம் என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கில் விவசாயி விளக்கி கூறினார். தரங்கம்பாடி அருகே உள்ள நரசிங்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஞானபிரகாசம். பட்டதாரியான இவர் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயத்தில் ஆர்வம் கொண்டு தமிழர் வேளாண்மை என்ற பெயரில் பல புது முயற்சிகளை செய்து வருகிறார். தமிழர் வேளாண்மை குறித்து தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் அறியும் வகையில் தமிழர் வேளாண்மை அறிமுகக் கூட்டம் நரசிங்கநத்தம் கிராமத்தில் நடந்தது. விவசாயி ஞானபிரகாசம் தலைமை வகித்தார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் 250 விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழர் வேளாண்மை குறித்து ஞானபிரகாசம் தலைமை உரையில் பேசியதாவது: தமிழர் வேளாண்மை என்பது பருவநிலை மீட்டு உருவாக்கம் செய்யப்படும் சாகுபடி ஆகும்.

நெல் என்பது செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதையும் தமிழன் தான் கண்டுபிடித்தான். பூமியில் எந்த உயிர் இனமும் வேளாண்மை செய்வது கிடையாது. மனிதன் தான் அதை செய்கிறான். பூமியை இயக்க வைக்கவும், உயிரினங்களை காப்பாற்றவும் தண்ணீர் அவசியம். அந்த தண்ணீரை வயல்களில் தேக்கி நெல் சாகுபடி செய்யும் முறையில் தமிழன் ஈடுபட்டான். நீராவி குளிர்ச்சி அடையும்போது நீராக மாறுகிறது. சமவெளி பரப்பில் தடுப்பணைபோல் வரப்புகளை உயர்த்தி அமைப்பதன் மூலம் அதன் மையப்பகுதியில் உள்ள வெப்பம் தடையின்றி மேல் நோக்கி செல்வதால் காற்றிலிருந்து நீராவியில் வெப்பம் பிரிந்து குளிர்ச்சியான கண்ணுக்கு தெரியாத நீர் துகள்கள் புவியீர்ப்பு விசையினால் கீழ்நோக்கி இழுக்கப்பட்டு நீர் உற்பத்தியாகிறது. இதனை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறேன்.

நடவு நட்ட பின் வயல்களில் உள்ள தண்ணீரை வடிக்கட்டாமல் தேக்கி வைப்பேன். அறுவடைக்கு சில தினங்களுக்கு முன்பே தண்ணீரை வடிய வைப்பேன். ஓட்டடையான் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தண்ணீரில் கிடப்பதால் பயிர் அழுகி போவதில்லை. அதற்கு மாறாக அதிக அளவில் குருத்துகளை விடுகிறது. ஒரு முறை நடவு நட்டு இரண்டு முறை அறுவடை செய்கிறேன். மழைநீரை வயல்களில் தேக்கி வைத்து சாகுபடி செய்வதால் தண்ணீர் தட்டுப்பாடு வராது. ஏக்கருக்கு இந்த சாகுபடியில் 25 மூட்டை நெல் கிடைக்கிறது என்றார்.

கூட்டத்தில் கோவையைச் சேர்ந்த சின்னசாமி பேசும்போது, நான் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின் விவசாயி பணியில் ஈடுபட்டுள்ளேன். சத்தியமங்கலத்தில் 3 ஏக்கரிில் நெல் சாகுபடி செய்துள்ளேன். ஞானபிரகாசம் அவர்களின் அறிவுரைப்படி வரப்புகளை உயரமாக்கி மழைநீரை தேக்கி வைத்து அதன்மூலம் சாகுபடி செய்து வருகிறேன். நான் உரங்களையோ, பூச்சி மருந்தோ பயன்படுத்துவதில்லை. அதன் காரணமாக உழவனின் நண்பன் என்று கூறப்படும் மண்புழுக்கள் ஏராளமாக என் வயலில் உற்பத்தி ஆகிறது. தமிழர் வேளாண்மை முறையில் நடவு செய்து பின் அறுவடை செய்கிறேன். இடையில் எந்த பணியும் செய்வதில்லை என்று பேசினார். ஈரோடு மாவட்டம், நம்பியூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் முத்துக்குமார் பேசும்போது, விவசாயம் பற்றி அறிந்துகொள்ள இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களுக்கு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பல்வேறு முறை விவசாயத்தை அறிந்து கொண்டேன்.

அந்த நேரத்தில் தான் தமிழர் விவசாயம் பற்றி யூ டியூப்பில் வந்ததை அறிந்து அதன்படி ஞானபிரகாசம் சொன்ன ஆலோசனையின்படி இப்போது விவசாயம் செய்து வருகிறேன். 3¾ ஏக்கரில் தமிழர் வேளாண்மை முறையில் பூங்கார் நெல் நேரடி விதைப்பு மூலம் பயிர் செய்துள்ளேன். பயிர் தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது. தண்ணீர் பிரச்சனை இல்லை. உரம், பூச்சி மருந்து தேவையுமில்லை. இனி விவசாயிகள் தமிழர் வேளாண்மை முறையில் சாகுபடி செய்தால் ஆரோக்கியமான உணவுகளை பெறமுடியும் என்று பேசினார். கூட்டத்தில் மேலும் தேவகோட்டை பிரசாத்மணி, பொள்ளாச்சி சந்திரபிரகாஷ், தருமபுரி ரமேஷ், தோட்டப்பாடி எழில்ராஜன், உத்திரமேரூர் ரமேஷ், திருவள்ளூர் மாவட்டம் தாமரைமணாளன் உள்ளிட்ட விவசாயிகளும் தமிழர் வேளாண்மை குறித்து தங்கள் அனுபவத்தை எடுத்துக் கூறினர்.

தமிழர் விவசாய தொழில்நுட்ப கருத்தரங்கில் விளக்கம் இனி எதிர்காலத்தில் தமிழர் வேளாண்மை மட்டுமே விவசாயிகளுக்கு கைகொடுக்கும்
தமிழர் வேளாண்மை முறை சாகுபடியில் பூச்சிகளுக்கு மருந்து அடிக்க வேண்டாம், உரங்கள் போட வேண்டாம். நடவு மற்றும் அறுவடை மட்டுமே செய்கிறேன். மற்ற எந்த பணிகளும் செய்வதில்லை. வரப்புகளை உயரமாகவும், அகலமாகவும் அமைத்துள்ளேன். வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வரப்புகளில் தென்னை, மா, புளி, முருங்கை உள்ளிட்ட மர வகைகளையும், நார்த்தை, எலுமிச்சை, சீதா, நாவல், இலந்தை, பலா, பனை உள்ளிட்ட பழ வகை மரங்களையும், கத்தரி, வெண்டை, சேனை, கருணை, மஞ்சள், பரங்கிக்காய், சுரைக்காய், பாகல், புடல் உள்ளிட்ட காய்கறிகளையும் பயிர் செய்துள்ளேன். அவை நல்ல அளவில் விளைச்சலை கொடுக்கின்றன. இப்படி பல அடுக்கு பயிர் முறைக்கும், பெய்கின்ற மழைநீரையே முழுமையாக நிலத்தில் நிறுத்தி சாகுபடி செய்யும் முறைக்கும் தமிழர் வேளாண்மை என்று பெயரிடப்பட்டுள்ளது. இனி எதிர்காலத்தில் தமிழர் வேளாண்மை மட்டுமே விவசாயிகளுக்கு கைகொடுக்கும் என்று விவசாயி ஞானப்பிரகாசம் கூறினார்.

Tags : study meeting ,collector ,Tharangambadi ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...